2025 ஜூலை 02, புதன்கிழமை

இளைய தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷல்

George   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்த தந்தைக்கு தன் மகன் மீது அளவு கடந்த அன்பு. ஒரு மகள் ஒரு மகன் என்று வாழ்ந்த அவருக்கு மகள் உலகை விட்டே பிரிந்து சென்று விட்டதால் அந்த அன்பையும் மகன் மீது சேர்த்தே செலுத்தினார். 

தன்னுடைய திரைப்படங்களில் ஏதாவது ஒரு பொசிட்டிவான கதாபாத்திரத்துக்கு  மகன் பெயரையே வைப்பார். பாடசாலையில்; படிக்கும் காலத்தில் அந்த பாடசாலைக்கு இரண்டு வாசல்கள். இரண்டிலும் அவரை அழைத்துச் செல்ல கார் நிற்கும். அவ்வப்போது புதிய ரக கார் எது அறிமுகமானாலும் மறுநாள் அவர் வீட்டு முன் நிற்கும், அந்த அளவுக்கு இருந்தது அப்பா மகன் உறவு. அந்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். அந்த மகன் ஜோசப் விஜய்.

சில திரைப்படங்களில் ஆசைக்காக மகனை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அது விஜய்யின் மனதில் நடிப்பு ஆசையை தூண்டியது. ஒரு நாள் 'அப்பா நான் சினிமாவில் ஹீரோவாக நடிக்கணும்' என்றார். 
'இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு நடிக்கப்போறியா வேற ஏதாவது செய்' என்றார் தந்தை. வற்புறுத்தல் தொடர்ந்தது. அம்மா ஷோபா சந்திரசேகர் சிபாரிசு செய்தார். 'நான் யார்கிட்டேயும் போய் என் மகனுக்கு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்க மாட்டேன். என்னோட சொந்த திரைப்படத்துல நடிக்க வைக்கிறேன்' என்றார்.
 

ரசிகனால் கிடைத்த அடையாளம்

நாளைய தீர்ப்பு திரைப்படம் 1992ஆம் ஆண்டு வெளிவந்தது. திரைப்படம் வெற்றிபெறவில்லை. இப்போது அப்பாவுக்கு கோபம் '40 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய என்னால் என் மகனை வெற்றிபெறவைக்க முடியலையா?' என தன்னை தானே கேட்டுக் கொண்டார். செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா திரைப்படங்களை விஜய்யை ஹீரோவாக வைத்து எடுத்தார். ரசிகன் மட்டும் கொஞ்சம் வெற்றியையும் கடுமையான விமர்சனத்தையும் சந்தித்ததுடன் விஜய் என்ற நடிகனை மக்கள் அடையாளம கண்டு கொள்ள வைத்தது.

காதலுக்கு கொடுத்த மரியாதை  

பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கி வைத்ததுடன் நம்ம வீட்டு பிள்ளை என்ற இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து மென்மையான காதல் கதைகளில் நடித்து இளவட்ட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். காதலுக்கு மரியாதை வெள்ளி விழா நாயகன் ஆக்கியது. திருமலை விஜய்யை அதிரடி ஹீரோவாக்கியதுடன் வசூல் மன்னனாகவும் மாற்றியது. அன்று முதல் இடையில் சில திரைப்படங்கள் தோற்றிருந்தாலும் பெரும்பான்மையான வெற்றித் திரைப்படங்களால் தன்னை இப்போதும் வசூல் சக்ரவர்த்தியாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

தோல்வியையும், வெற்றியையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாத அற்புதமான நடிகர் விஜய். கடைசியாக அவர் நடித்த தெறி திரைப்படம் இன்னும் வசூலை வாரி கொடுத்துக் கொண்டிருக்கும்போது அதை பற்றி யோசிக்காமலேயே அடுத்த திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.

60 திரைப்படங்களில் நடித்திருக்கு விஜய், 25க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களின் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை மிகவும் விரும்புகிறவர். ஆதனால் தான் ராஜா ராணி என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் அட்லிக்கு தனது படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார் ன்றார் மிகையில்லை. எஸ்.ஜே.சூர்யா, ஏ.வெங்கடேஷ், பேரரசு, ரமணா, மாதேஷ், ஜோன் மகேந்திரன் உள்ளிட்ட பல புதுமுகங்களுக்கு அவர்தான் வாய்ப்பளித்தார். அழகிய தமிழ்மகன் என்ற தோல்வி திரைப்படத்தை இயக்கிய பரதனைத்தான் தனது 60ஆவது திரைப்படத்தின் இயக்குநராக்கியிருக்கிறார்.

எப்போதும் ரசிகர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்வதில் விஜய் மாதிரி நடிகர்கள் இல்லை எனலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியூர்களுக்கு சென்று மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார். மாதம் ஒரு நாள் ஆயிரம் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். 

'எனக்கு வெறும் ரசிகர்களாக மட்டும் இருந்து விடாதீர்கள். வீட்டுக்கு நல்ல மகனாவும் வாழ்ந்து காட்டுங்கள்' என்று அறிவுரை கூறி அனுப்பி வைப்பார். இதுவரையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது அதனை நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தார்.

விஜய் கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கிறார். விக்ரம், சூர்யா, கமல் போன்று வித்தியசமான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்ற விமர்சனம் உண்டு. அதற்கு அவரது பதில் 'நான் நல்ல நடிகன் என்று எப்போதும் சொன்னதில்லை. நல்ல பொழுபோக்காளன் மக்களை சந்தோஷப்படுத்துவது மட்டுமே என் வேலை. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன்' என்பார். எந்த விமர்சனங்களையும் தாங்கிக் கொள்வார். எல்லாவற்றுக்கும் சின்ன சிரிப்புதான் பதில். அதனால் 60 திரைப்படங்கள் தாண்டியும். 40 வயது தாண்டியும் நிதானமாக தன் பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
வருடத்தில் ஒரு முறைதான் தீபாவளி, ஆனால் விஜய் ரசிகர்களுக்கு வருடத்தில் இரண்டு தீபாவளியாவது வந்துவிடும். ஆம் விஜய் திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு தருணமும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வயது வித்தியசமின்றி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர். இன்று பல சிறுவர்களும் அவருக்கு ரசிகர்கள். 

ஏன் என்ற காரணம் தெரியாமல் அனைவரையும் தனக்கு ரசிகனாக்கி கொண்ட ஒரு நடிகர். தொலைக்காட்சியில் விஜய் நடித்த திரைப்படங்கள் போகும் போது யாரும் சேனலை மாற்று என்று சொல்வது குறைவு, அந்தளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் சகலரையும் கவர்ந்த நடிகன். எல்லாவற்றுக்கும் மேலாக தலைவா என்று சொல்லாமல் அண்ணா என்று ரசிகர்களால் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகன் விஜய்.

இன்று தனது 42ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை உட்பட சகல ஊர்களிலும் விஜயின் மெகா ஹிட் திரைப்படங்கள் இன்று சிறப்பு திரையிடப்பட்டுள்ளன. சென்னையில் போக்கிரி திரைப்படம் திரையிடப்படுகின்றது.

இளைய தளபதி விஜய்க்கு தமிழ்மிரர் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

விஜய் ரசிகர்களாகிய நீங்களும் வாழ்த்து தெரிவிக்கலாம்.

 


You May Also Like

  Comments - 0

  • Pradeesh Thursday, 23 June 2016 05:34 AM

    Wish you many more happy returns of the day Vijay....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .