2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

“கூலி” நடிகர் வெளிநாடு செல்ல தடை

Editorial   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து இருந்தார். தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த படி, 40 சதவீத லாப பங்கு கிடைக்கவில்லை என்று அவர் எர்ணாகுளம் சார்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது வழக்கில் இருந்து முன் ஜாமீன் பெற்றுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கறுப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தது.படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் சாஹிரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். நிதி மோசடி வழக்கில் கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே அவருக்கு முன்ஜாமின் வழங்கியிருந்ததால் போலீசார் அவரை விடுவித்தனர். மேலும் அந்த வழக்கில் நடிகர் சவுபின் சாஹிருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கோர்ட்டு விதித்திருந்தது.

 

இந்தநிலையில் துபாயில் நடக்க உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் சவுபின் சாகிர் திட்டமிட்டார். அதில் பங்கேற்பதற்கு துபாய் செல்ல அனுமதிக்குமாறு கொச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சி வெளிநாட்டில் இருப்பதால், சவுபின் சாகிர் அவரை சந்தித்தால் வழக்கு விசாரணையில் பாதிக்கக்கூடும் என்று அரசு தரப்பு வாதிட்டது. அவரது மனுவை கோர்ட்டு நிராகரித்தது. நடிகர் சவுபின் சாகிர் துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்தது. "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தின் தயாரிப்பில் நடந்த நிதி மோசடி வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்திருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சவுபின் சாஹிர் துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்துள்ளது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கேரள ஐகோர்ட்டை நாடி மேல்முறையீடு செய்து வெளிநாடு செல்ல அனுமதி கோர சவுபின் சாஹிர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 , நடிகர் சௌபின் சாஹிர் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தில் 'தயாளன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .