2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

கேன்ஸ் விழாவில் குங்கும திலகமிட்டு வந்த ஐஸ்- ஏன்?

Simrith   / 2025 மே 22 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் திகதி ஆரம்பித்தது. 11 நாள்கள் நடைபெற்று மே 24 ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளது.

உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கேன்ஸ் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

அப்படி, இந்தியாவிலிருந்து பல பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டாலும் ஒவ்வொரு ஆண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் தவறாமல் கலந்துகொள்கிறார்.

காரணம், ஐஸ்வர்யா ராய் உலகளவில் பிரபலமான அழகு சாதன பிராண்டான L'Oréal Paris-ன் விளம்பரத் தூதராக 2003 முதல் இருந்து வருகிறார். இந்த நிறுவனம் கேன்ஸ் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ ஒப்பனை பங்காளராக (Official Makeup Partner) இருப்பதால், அவர் இந்த விழாவில் தொடர்ந்து பங்கேற்கிறார். L'Oréal Paris சார்பாக சிவப்பு கம்பள அணிவகுப்பில் (Red Carpet) கலந்து கொள்வது அவரது பொறுப்புகளில் ஒன்றாகும்.

மேலும், இந்தியப் பண்பாடு மற்றும் அதைப் பிரதிநிதிப்படுத்தும் முகமாகவும் ஐஸ்வர்யா ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்கிறார்.

ஆண்டுதோறும் விதவிதமான ஆடைகளில் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை பனாரஸ் புடவையில் நெற்றியில் குங்கும (சிந்தூர்) திலகமிட்டபடி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராய் இந்தத் தோற்றத்தில் வந்ததற்குக் காரணம், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியானதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தானில் நடத்தியது. அதைக் குறிப்பிடும் வகையிலேயே, ஐஸ்வர்யா இந்தத் தோற்றத்தில் வந்திருப்பார் என்றே ஊகிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .