2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

யாலவில் கஞ்சா ​சேனை ; சுற்றிவளைத்த ட்ரோன்

Janu   / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தணமல்வில பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தணமல்வில பொலிஸாரும் களுத்துறை விமானப்படை முகாமின் UAV (ட்ரோன்) பிரிவினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (26) யால காப்பகப்பகுதியில் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது, சுமார் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் (2.5 கோடி) ரூபாய் பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று முற்றுகையிடப்பட்டதுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தணமல்வில, கித்துல்கோட்டை பகுதியை சேர்ந்த 33 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக இக்காப்பகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

யால காப்பகத்திற்கு மேலாக ட்ரோன் (Drone) கமராக்களை பறக்கவிட்டு முன்னெடுக்கப்பட்ட வான்வழி ஆய்வின் போதே இந்த பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, பாதுகாப்பு படையினர் கடும் மழைக்கு மத்தியிலும் 'கிரிந்தி ஓயா' ஆற்றைக் கடந்து, மிகவும் கடினமான பயணத்தின் பின்னர் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த பகுதியைச் சென்றடைந்து இந்த முற்றுகையை நடத்தியுள்ளனர்.

இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இத்தோட்டத்தில், வெவ்வேறு உயரங்களைக் கொண்ட சுமார் 35,000 கஞ்சா செடிகள் காணப்பட்டுள்ளன. செடிகள் அனைத்தும் வெட்டி அழிக்கப்பட்டதுடன், அவற்றில் ஒரு பகுதி , கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் சந்தேக நபர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தணமல்வில பொலிஸார் மற்றும் களுத்துறை விமானப்படை முகாமின் UAV பிரிவினர் இணைந்து இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .