2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தென்னிந்திய சினிமா ஆளுமை கலைமாமணி மட்டக்களப்பிற்கு வருகை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் அழைப்பிலும், மதகு ஊடகத்தின் அனுசரணையிலும் தென்னிந்திய திரையுலகின் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்,பாடகர் எனப் பன்முகத்திறமையுடைய தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் நாசர் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளார்.

நாசர் அவர்கள் சினிமாக் கலைஞர் எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், அவர் அடிப்படையில் ஓர் சிறந்த மேடை நாடகக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலும் தொடர்பாக கல்வி பயிலும் மாணவர்களின் திறன் விருத்திக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி. பாரதி கென்னடி அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இந்த வருகை இடம்பெற்றிருந்தது.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தபின்னர், நிறுவகத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர்கள் போன்றோரால் மண்டபத்திற்குள் அழைத்துவரப்பட்டார். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளர்களால் விபுலானந்த கீதம் பாடப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

நிறுவகத்தின் பணிப்பாளரினால் தலைமையுரை ஆற்றப்பட்டது. இதன்போது சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு உட்பட தென்னிந்திய பிரபலங்களின் பங்களிப்பு தொடர்பாக நினைவுகூறப்பட்டதுடன், நாசர் அவர்களின் வருகையின் முக்கியத்துவமும் தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, நாசர் அவர்கள் ஒரு சிறு உரையாற்றினார். மட்டக்களப்பு பேச்சுத்தமிழ் தமது காதுகளில் பாடல் போன்று ஒலிப்பதாக அவர் கூறியபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் கரகோசம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் எழுத்து வடிவத்தில் கூட வழக்கொழிந்துபோன பல அரிய – அழகிய சொற்கள் சர்வ சாதாரணமாக மட்டக்களப்பு பேச்சுத்தமிழில் பாவிக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் மேடை நாடகம்,அரங்கியல்,ஈழத்து சினிமா, உலக சினிமா நடிகராகவும், இயக்குநராகவும் திரு. நாசர் அவர்களின் அனுபவங்கள், அறிவுரைகள் எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தினால் நாசர் அவர்கள் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மட்டக்களப்பின் சினிமாக் கலைஞர்களின் சார்பில் பங்குபற்றியிருந்தவர்களாலும் நாசர் அவர்கள் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

சில ஓவியர்களும் தமது அன்பின் வெளிப்பாடாக தம்மால் வரையப்பட்ட நாசர் அவர்களின் ஓவியத்தை பரிசளித்தனர்.

நாசரின் இந்த விஜயத்திற்கான ஊடக அனுசரணையை 'மனிதநேயத் தகவல் குறிப்புகள்' (மதகு) ஊடகம் வழங்கியிருந்ததுடன், நிகழ்வுகள் அனைத்தும் மதகு முகநூல் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .