2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

வெலே சுதாவின் சொத்து விவகாரம்: பராமரிப்பாளரை நியமிக்க ஆட்சேபனை

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

ஹெரோய்ன் வைத்திருந்த, விற்ற குற்றச்சாட்டில் மரண தண்னைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமார அவருடைய மனைவி மற்றும் தங்கைக்கு எதிரான வழக்கில், சொத்துப் பராமரிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு பிரதிவாதிகள் தரப்பினால், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

ராஜகிரிய ரோயல் பார்க், வெள்ளவத்தை சீகல் ரெசிடென்ஸ், விஜேராம மாவத்தை, நெதிமால ஆகிய பிரதேசங்களில் வீடுகளை வாங்கி பணச்சலவை செய்தனர் என்று, சட்டமா அதிபரால், மேற்குறித்த மூவருக்கும் எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டஇந்த வழக்கில், சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 18.2 மில்லியன் ரூபாய் தொடர்பிலும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.  

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் நேற்று (19) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட, சொத்துகளைப் பராமரிப்பதற்காக, நீதிமன்றத்தால் பராமரிப்பாளரொருவரை நியமிப்பதற்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்தார்.  

அத்துடன், இதுதொடர்பான எழுத்துமூல ஆட்சேபனையையும் மன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்ததுடன், சாட்சியப் பதிவுக்கான தினங்களாக டிசெம்பர் 14, 15ஆம் திகதிகள் குறிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.  

இந்த விடயம் தொடர்பில், இம்மாதம் 27ஆம் திகதி ஆராயப்படும் என, அறிவித்த நீதிபதி வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .