2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை எவராலும் எதிர்க்கவே முடியாது

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

'நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படாது, கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க, சட்டத்தில் உள்ளது. கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அவரால் கைதிகளை விடுவிக்க முடியும். அதனை யாரும் தடுக்க முடியாது' என அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போது ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை கூறினார்.

ஆயுதக்கப்பல்

இதேவேளை, அவன்ட் காட் ஆயுதக் கப்பல் விவகாரத்தை, அரசியல் பலத்தால் மூடிமறைக்க பலர் முனைவதாகவும், அதற்குப் பொலிஸாரை குற்றஞ்சாட்டுவது எந்தவித நியாயமும் இல்லை எனவும் பொன்சேகா கூறினார்.

இந்த ஆயுதங்கள், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக வைக்கப்பட்டிருந்தவை. ஏனென்;றால், சர்வதேசக் கடற் சட்டத்துக்கு அமைவாக, நாட்டிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்துக்குள் ஆயுதக் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதுடன், அதன் இயந்திரம் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவன்ட் காட் கப்பல் அப்படி இல்லை. அதில், அந்தக் கப்பலுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் கூட இல்லை.

அத்துடன், இந்த ஆயுதங்களை மறைத்து வைத்த விவகாரத்தில், முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் தலையீடு நிச்சயம் இருந்திருக்கும். இதனுடைய அனுமதியின்றி இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியாது. 

ரக்ன லங்கா நிறுவனம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளதாகவும், அவன்ட் காட் விவகாரம் சட்டவிரோதமானது அல்ல எனவும் சட்டமா அதிபர்  திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அப்படியென்றால் எனது மனைவி, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவராக உள்ளார், இதுவும் பாதுகாப்பு அமைச்சு கீழ் உள்ளது. அப்படியென்றால், ஆயுதங்களைச் சேகரித்து வைக்க அது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள என் மனைவிக்கும் அனுமதி இருந்திருக்க வேண்டுமல்லவா? சட்டமா அதிபர் திணைக்களத்தில் இரண்டாவது பதவியில் இருக்கும் பொறுப்புமிக்க ஒருவர் இவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .