2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிராம சேவகர்களின் அசமந்தம்: மக்கள் அவதி

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கிராம சேவகர்களின் சேவைகள், தோட்ட மக்களுக்கு கிரமமாகவும் முறையாகவும் கிடைக்கப்பெறாததால், பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை, எதிர்நோக்கி வருகின்றனர்.  

கிராம சேவை உத்தியோகத்தர்கள், வாரத்தில் ஆறு தினங்களுக்கு, தோட்டங்களிலுள்ள கிராம உத்தியோகத்தர் காரியாலயங்களில் கடமையாற்ற வேண்டும். வாரத்தின் திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில், காலை 8 மணி முதல் மாலை 4.30 மணிவரை, முழு நேரக் கடமைகளில் ஈடுபடல் வேண்டும்.   

ஏனைய செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய தினங்களில், குறிப்பிட்ட அலுவலகங்களுக்குச் சென்று, தான் இந்தக் காரணத்துக்காக பிரதேச செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட ஏனைய கள அலுவலகங்களுக்குச் செல்வதாக அறிவித்தல் பலகையில் குறிப்பிட்டுவிட்டு, வெளியேற வேண்டும். இதுவே நியதியாகும்.   

ஆனால், பெரும்பாலான கிராம சேவை உத்தியோகத்தர்கள், வாரத்தில் ஆறு தினங்களும் தமது அலுவலகங்களுக்கு செல்லாமல், திங்கள், வியாழன் ஆகிய இரு தினங்களில் மட்டும், காலை 9 மணிக்குச் சென்று பகல் 12 மணியுடன் வீடு திரும்பி விடுகின்றனர்.   
இதனால், குறிப்பிட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவைகள், பதுளை மாவட்டப் பெருந்தோட்ட மக்களைச் சென்றடைவதில்லை. எந்தவொரு தேவைகளுக்கும் கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ் மற்றும் அவரது சிபாரிசுக் கடிதம் அவசியமாக இருப்பதால், அத்தேவைகளைப் பெருந்தோட்ட மக்களினால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலே காணப்படுகின்றது.   

பதுளை ஸ்பிரிங்வெளி பெருந்தோட்டத்தில், ஆறு தோட்டப்பிரிவுகள் காணப்படுகின்றன. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப்பகுதியில், கடந்த ஒரு வருடமாகவே, கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார். இவரின் சேவைகள், தோட்ட மக்களை முழுமையாகச் சென்றடைவதில்லையென்று, தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.   

ஆளடையாளத்தை உறுதிப்படுத்திய கடிதமொன்றை பெற்றுக்கொள்வதற்காக, தோட்ட இளைஞன் ஒருவன், கிராமசேவை உத்தியோகத்தரை சந்தித்தபோது, “உங்களை எனக்குத் தெரியாது. ஆதலால், உறுதிப்படுத்திய கடிதத்தை தரமுடியாது” என்று, கிராம சேவை உத்தியோகத்தர் கூறியுள்ளார். அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் இளைஞனின் கைகளில் இருந்துள்ளன. அந்த ஆவணங்களைக்  காட்டியப் போதிலும், கிராம சேவை உத்தியோகத்தர், அவ் இளைஞனுக்கு தேவைப்படும் கடிதத்தை வழங்க மறுத்துவிட்டார். இவ்வாறே, ஸ்பிரிங்வெளி தோட்டத்தைச் சேர்ந்த மக்கள், கிராம சேவை உத்தியோகத்தரின் முறையான சேவை கிடைக்காததால், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, பெருந்தோட்டப் பகுதிகளில் கடமையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும் எனவும்  குறைந்தது திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களிலாவது, மாலை 6 மணிவரை அலுவலகத்தில் கடமையிலிருக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X