2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

கரையும் மின்கலத்தை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெப்பம் அல்லது திரவத்துக்கு வெளிப்படுத்தப்படும்போது கரையக்கூடிய, தானாக அழிவடையக்கூடிய மின்கலமொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட மின்கலமானது 2.5 வோல்ற் அளவானது என்பதுடன், கணிப்பொறி ஒன்றை 15 நிமிடங்களுக்கு இயக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்கலத்தைப் பயன்படுத்தி, இராணுவ இரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதுடன், இதைப் பயன்படுத்தி சூழல் கண்காணிப்பு சாதனங்களையும் இயக்க முடியும்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்காவின் ஐயோவா மாநில இயந்திர பொறியியல்துறை பேராசிரியர் றீஸா மொன்டஸமி, மேற்கூறப்பட்ட மின்கலமே, முதலாவது இயங்குநிலை நிலைமாறும் மின்கலம் என்று கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் மேற்குறித்த மின்கலமானது லித்தியத்தை கொண்டிருப்பதால் இம்மின்கலத்தை மனித உடலில் பயன்படுத்த முடியாது. மனித உடலினுள் பாதிப்பு ஏற்படாமல், மின்கலங்களை எவ்வாறு கரைப்பது, மற்றும் மனித உடலில் மின்கலத்தை அகற்றும் வலியைத் தடுத்தல் தொடர்பாக சில வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட மின்கலமானது ஐந்து மில்லிமீற்றர் நீளமானதும், ஒரு மில்லிமீற்றர் தடிப்பைக் கொண்டதும் ஆறு மில்லிமீற்றர் அகலத்தைக் கொண்டதும் ஆகும்.

இம்மின்கலமானது ஓர் அனோட்டையும் ஒரு கதொட்டையும் பொலிவீனைல் அற்ககோலை அடிப்படையாகக் கொண்ட இரண்டு படைகளைக் கொண்டுள்ள மின்பகுபொருள் பிரிவாக்கியையும் கொண்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி மின்கலத்தினை நீரினுள் போடும்போது, மின்கலத்தின் பொலிமர் உறையானது வீங்குவதுடன், மின்பகுபொருள்கள் உடைவுறுகின்றன. இதனாலேயே மின்கலம் கரைவுறுகின்றது. எவ்வாறெனினும் மின்கலமானது மிக நுண்ணிய பொருட்களைக் கொண்டிருக்கின்ற நிலையில், அவை சிதைவடையமாட்டாது. இதன் காரணமாக மின்கலமானது முழுமையாக கரையப்போவதில்லை. மேற்படி செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறுவதற்கு அரை மணித்தியாலம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .