2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

பாரிய தரவு அச்சம் என்கிறது கசிந்த அறிக்கை

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 08 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்புச் சேவைகளினால் சேகரிக்கப்பட்ட பாரிய எண்ணிக்கையான தரவுகள் காரணமாக, பயன்தரக்கூடிய உளவுத் தகவல்கள் கவனத்தில் எடுக்கப்படாமல் விட்டிருக்கலாம் என 2010ஆம் ஆண்டிலேயே உளவு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கு எழுதப்பட்டிருந்த அறிக்கையின் வரைபொன்று, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த, இரகசியங்களை வெளிப்படுத்துபவரான எட்வேர்ட் ஸ்னோடானின் இடைமறிக்கும் இணையத்தளத்தினால் பெறப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டதிலேயே மேற்குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன.

உயிர் காக்கக்கூடிய புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டிருக்கலாம் என குறித்த அறிக்கையானது தெரிவித்துள்ளது. நாடாளுமான்றத்தில், விசாரணை அதிகாரங்களுக்கான சட்டமூலம் செல்லுகின்ற நிலையில் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையின் ஓரிடத்தில், முழுமையாக பயன்படுத்தக் கூடியளவிற்கு மேலதிகமாக, கணிசமான அளவு தரவுகளை தற்போது பாதுகாப்புச் சேவை சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட தரவுகளில் உள்ள உயிர் காக்கும் உளவுத் தகவல்களை கையாள முடியாது போகுமெனவும், இதன் காரணமாக, உளவுத்துறை தோல்வியடையக் கூடிய உண்மையான ஆபத்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள அறிக்கையானது இரகசியமானது என குறிப்பிடப்பட்டதுடன், 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் கண்காணிப்புத் திறன்கள் பற்றி அரசாங்கத்தின் அமைச்சரவை அலுவலகத்துக்கும் திறைசேரி திணைக்களத்துக்கும் எடுத்துரைக்க, பிரித்தானிய உளவு முகவரகங்களால் தயாரிக்கப்பட்டதே மேற்படி அறிக்கை என நம்பப்படுகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய விசாரணை அதிகாரங்களுக்கான வரைபின் மூலம் கண்காணிப்புத் திறன்கள், இற்றைப்படுத்தப்படவுள்ளது. இந்த வரைபின் மூலம், இணைய போக்குவரத்தின் மொத்த சேகரிப்புக்கு சட்டரீதியான அனுமதி வழங்குவதுடன், 12 மாதங்களுக்கு, இணைய உலாவுதல் தரவுகளை சேவை வழங்குநர்கள் வழங்க வேண்டியும் உள்ளது.

பயங்கரவாதத்துக்கெதிரான போருக்காக, மேற்படி அதிகாரங்கள் கட்டாயம் தேவை என அரசாங்கம் தெரிவிக்கின்ற நிலையில், கசிந்த ஆவணங்களின் மூலம், பாரிய கண்காணிப்பு விடையல்ல என எடுத்தியம்புவதாக, மேற்படி வரைபுக்கு எதிரானவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .