2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக்குடனான தரவுப் பகிர்வு இணக்கம்: WhatsApp-க்கு எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில், ஐரோப்பிய தனியுரிமைக் கண்காணிப்பு அமைப்புகளால் WhatsApp எச்சரிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-இனுடைய தனியுரிமைக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக தீவிரமான கரிசனைகளைக் கொண்டிருப்பதாக ஒழுங்குபடுத்துநர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களினால், தரவுப் பகிர்வு சாத்தியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய தனியுரிமை விதிகளை மீறவில்லை என தெளிவுபடுத்தும் வரையில், தரவுகளைப் பகிர்வதை நிறுத்துமாறு தகவல் பரிமாற்றச் செயலி நிறுவனமான WhatsApp-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒழுங்குபடுத்துநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள WhatsApp, தரவுக் கண்காணிப்பு அமைப்புகளின் கரிசனைகள் தொடர்பில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளது.

19 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு, 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் WhatsAppஐ வாங்கிய பேஸ்புக்குடன் மேலதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக, இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் WhatsApp தெரிவித்திருந்தது. குறித்த விடயத்தை நியாயப்படுத்திய WhatsApp, யாருடன் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் மேலும் பொருத்தமானதாகவிருக்கும் என்று கூறியிருந்தது. எனினும், பேஸ்புக்கிலிருந்து WhatsApp சுயாதீனமாகவிருக்கும் என்ற உறுதிமொழியை குறித்த விடயம் மீறுவதாக பலர் விமர்சித்திருந்தனர்.

தகவலைப் பரிமாறும் முடிவினைத் தொடர்ந்து, ஐரோப்பா முழுவதிலுமுள்ள தரவுப் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. இந்நிலையிலேயே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு தகவல் பரிமாறப்படும்போது, தனியுரிமையை நிர்வகிக்கும் பிராந்திய விதிகள் மீறப்படவில்லை என உறுதிப்படுத்தப்படுவதற்கு மேலதிக நடவடிக்கை தேவையென, தரவுக் கண்காணிப்பு அமைப்புகளின் கூட்டமைப்பான Article 29 Working Party, தற்போது தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .