2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை பார்வையற்றவர்கள் பார்க்கலாம்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைய உலகமானது புகைப்படங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகையில், புகைப்படங்களை வாசித்து அதை விழிப்புலனற்றோருக்கு தெரிவிக்க கூடிய அமைப்பு ஒன்றை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையமானது விரைவாக மாற்றமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் ஏறத்தாள முழுமையாக எழுத்துக்களால் மாத்திரமே இருந்த இணையம், தற்போது புகைப்படங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிவற்றில் தினமும் 1.8 பில்லியன் புகைப்படங்கள் தரவேற்றப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட தகவலானது ஆர்வமிக்க புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு இனிப்பான செய்தியாகவிருந்தாலும் தற்காலத்தில் நவீன உதவியளிக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் இருந்தாலும் விழிப்புலனற்ற, பகுதியளவிலான பார்வையைக் கொண்டிருப்பவர்களுக்கு புகைப்படத்தில் என்ன இருக்கின்றது என்பது வழமையாக தெரியாதது கவலை தரக் கூடிய செய்தியாகும்.

இந்நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைக்கு பேஸ்புக்கினால் கடந்த செவ்வாய்க்கிழமை (05) அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சேவையொன்று பரிகாரத்தை வழங்க முற்படுகிறது.

screenreaders எனப்படும் அதிநவீன மென்பொருளை விழிப்புலனற்றோர் பயன்படுத்துவதன் மூலம் கணினிகளை பாவனைக்குரியதாக்கலாம். மேற்படி மென்பொருளின் மூலம், திரையிலுள்ள உள்ளீடுகள் பேச்சு வெளிப்படுத்தலாகவோ அல்லது பிறைலியாகவோ மாற்றும். ஆனால், அவர்களால் எழுத்துக்களை வாசிக்க மட்டுமே முடியும். புகைப்படங்களை வாசிக்க முடியாது.

பேஸ்புக்கில் தரவேற்றப்படும் புகைப்படங்களை, செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்துவதன் மூலம் பேஸ்புக்கின் வழங்கிகள் வர்ணிப்பதோடு screenreaderஇனால் வாசிக்கக் கூடிய முறைமையில் வழங்கும்.

இதுவரையில், கார்,படகு, விமானம், சைக்கிள், ரயில், வீதி, மோட்டார்சைக்கிள், பஸ், வெளி, மலை, மரம், பனி, வானம், சமுத்திரம், நீர், கடற்கரை, அலை, சூரியன், கண்ணாடி, டென்னிஸ், நீச்சல், அரங்கு, கூடைப்பந்து, கோல்வ், குளிர்களி, பீஸா, சிற்றுண்டி, கோப்பி, குழந்தை, தாடி, சிரிப்பு, அணிகலன், சப்பாத்து, செல்பி உள்ளிட்ட 80 பொருட்கள், நடவடிக்கைகளை இனங்காணும் என பேஸ்புக் தயாரித்துள்ளது.

மேற்படி மென்பொருளானது, விழித்திரையில் உள்ள ஒளிக்கு துலங்கலடையக் கூடிய உணரிகள் அழியும் குறைபாட்டால் தனது பார்வையை இழந்த பேஸ்புக் பொறியியலாளர் மற் கிங்கினாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X