Shanmugan Murugavel / 2016 மே 11 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge ஜூனியர், இவ்வருடமும் இடம்பெறவுள்ளது. கடந்த முறை போல இம்முறையும் வட மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்தே இப்போட்டி நடாத்தப்படவுள்ளது.

இப்போட்டியில், தனியாகவோ அல்லது ஆகக் கூடுதலாக மூன்று உறுப்பினர்களை உடைய குழுவாகவோ, 2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று 19 வயதுக்கு மேற்படாத மாணவர்கள்பங்குபற்றலாம். எனினும், குழுவாகப் பங்குகொள்வது வரவேற்கத்தக்கது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். குழுவாகப் பங்குபற்றும் மாணவர்கள், குறித்த ஒரு பாடசாலையைச் சேர்ந்தவராக இருப்பதுடன், குழுத் தலைவரை தெரிவு செய்வதுடன், போட்டிக்காலம் முடியும் வரை அத்தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும்.
இணைய செயலி உருவாக்கம், அலைபேசி செயலி உருவாக்கம், வன்பொருள் செயலி உருவாக்கம் என மூன்று பிரிவாக போட்டிகள் இடம்பெறும். விரும்பிய ஒரு பிரிவைத் தெரிவு செய்து அதற்குரிய வகையில் தமது செயற்றிட்டத்தினை மாணவர்கள் உருவாக்கலாம்.
மாணவர்களால் உருவாக்கப்படும் செயற்றிட்டமானது, நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னைக்கான தீர்வாகவோ அல்லது வியாபாரரீதியில் ஏற்படும் தேவைகளுக்கான ஒரு தீர்வாகவோ அல்லது கணினி விளையாட்டு போன்றதொரு பொழுதுதுபோக்கு அம்சத்தினை உள்ளடக்கியதாகவோ இருக்கின்ற நிலையில் புத்தாக்கத்தினை வெளிக்கொணருவதாக இருக்க வேண்டும். தாங்கள் விரும்பியதொரு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி எடுத்துக் கொண்ட செயற்றிட்டத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்யலாம்.
இப்போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை, https://docs.google.com/forms/d/1mXBXePO9_vIBZkU9_z6h0-ay-tZfXl02MGp6MkhGKoQ/viewform என்ற இணைய முகவரியில் பெற்று, மின்னஞ்சலூடாகவோ, தபாலினூடாகவோ, பாடசாலை அதிபரினால் அல்லது அதற்குப் பொறுப்பானவர்களால் உறுதி செய்யப்பட்டு, எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் வந்தடையும் வண்ணம் அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சலினூடான விண்ணப்பங்களை அனுப்புவதாயின், event@yarlithub.org என்ற முகவரிக்கும் தபாலினூடான விண்ணப்பங்களை அனுப்புவதாயின் “சிவாபாதசுந்தரம் தர்மசீலன், உதவிக் கல்விப்பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்), வடமாகாணக் கல்வித் திணைக்களம், மருதனார் மடம், யாழ்ப்பாணம்" என்ற முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும். தவிர, போட்டியில் பங்குபற்றுவதற்கான எழுத்து மூல அனுமதியினை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை அனுப்பிய பின்னர், நீங்கள் தெரிவு செய்த எண்ணக்கருவை அபிவிருத்தி செய்யலாம். அபிவிருத்தி செய்யும் காலத்தில் தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படின், மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். தவிர, Yarl IT Hub இன் https://www.facebook.com/yarlithub/?fref=ts என்ற பேஸ்புக் பக்கத்திலும் https://www.youtube.com/user/yarlithub/videos?spfreload=10 என்ற யூட்யூப் அலைவரிசையிலும் தொழில்நுட்பம் சார்ந்த காணொளிகளைப் பெற முடியும்.
போட்டியின் ஆரம்பக் கட்ட மதிப்பீடானது ஜூன் மாத ஆரம்பத்தில் உங்கள் பிரதேசங்களில் இடம்பெறுவதுடன், இம்மதிப்பீட்டுக்காக ஒவ்வொரு குழுவும் அல்லது தனிநபரும் தாங்கள் செய்தனவற்றை மதிப்பீட்டுக் குழுவுக்கு காண்பித்து ஒரு அளிக்கை செய்யவேண்டும். புதுமை, பயன்பாட்டுத்திறன், முழுமை, அசல்தன்மை, தொழில்நுட்ப ரீதியான ஸ்திரத்தன்மை என்பவற்றின் அடிப்படையிலேயே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். ஆரம்ப கட்ட மதிப்பீடு தொடர்பான சரியான திகதி, இடம் என்பன தமிழ்மிரர், மின்னஞ்சலூடாக அறிவிக்கப்படும்.
பின்னர், இறுதிப் போட்டியானது, 25, 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும். இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகளுக்கு பின்னூட்டங்கள் வழங்கப்படும். அவற்றினை கருத்திற் கொண்டு தமது செயற்றிட்டத்தினை மேலும் விருத்தி செய்து இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இறுதிப் போட்டியின்போது தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து செயற்றிட்டத்தினை மேம்படுத்த முடியும் என்பதுடன், அவர்களது அளிக்கைகளை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஜூன் 26ஆம் திகதி மாலை இறுதி மதிப்பீடு இடம்பெறும். இதன்போது, செயற்றிட்டத்தினை முன்வைத்து அளிக்கையினைச் செய்வதற்கு 4 நிமிடங்களும் அதனைத் தொடர்ந்ததானா கேள்வி பதிலுக்கு 2 நிமிடங்களும் ஒதுக்கப்படும்.
இணைய செயலி உருவாக்கம், அலைபேசி செயலி உருவாக்கம், வன்பொருள் செயலி உருவாக்கம் ஆகிய மூன்று தனித்தனி பிரிவுகளிலும் முதலிடம் பெறுகின்ற குழுக்களுக்கு அல்லது தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்தமாக முதலிடம் பெறுகின்ற குழுக்களுக்கும் அல்லது தனிநபருக்கும் விருதுகளும் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படுவதுடன், இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் குழுக்கள், தனிநபர்கள் அனைவருக்கும் சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் வலயமட்டத்தில் சிறப்பாகச் செயற்படும் அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டிகள் தொடர்பாகவும் போட்டியின் வடிவம் சம்பந்தமாகவும் ஏதாவது தெளிவின்மைகள் இருப்பின், கெ.சர்வேஸ்வரன் (077-2244192, sarves@yarlithub.org), சோ.மயூரன் (077-3400432, smayoorans@yarlithub.org) ஆகியோரைத் தொடர்பு கொள்ள முடியும்.
10 minute ago
14 minute ago
23 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
23 minute ago
28 minute ago