2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க செயலி

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரை நீங்கள் சந்தித்தால், உடனடியாக எச்சரிக்கும் ஒரு செயலியை பயன்படுத்துவதே தொற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் புதிய செயலியை சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

சமஸ்கிருத மொழியில் 'உடல்நலத்துக்கான பாலம்' எனப்படும் 'ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்னும் பெயர் கொண்டஇந்த செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும்.

நோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்தச் செயலியை பயன்படுத்தும் நபர் இருக்கும் அதே பகுதியில் உள்ளனரா என ஆராயும்.

இந்தச் செயலி உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளாக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும்.

ஒருவர் எதிர்பாராமல் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தால் இந்தச் செயலி மூலம் எச்சரிக்கை (அலர்ட்) விடுக்கப்படும்.

இதற்காக அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டபின், உங்கள் அலைபேசி எண்ணை இதில் பதிவு செய்ய வேண்டும்.

இதை பயன்படுத்துபவருக்கு தொற்று பரவியிருந்தால் அல்லது அருகில் இருக்கும் யாருக்காவது தொற்று இருந்தால் அவர்களைப் பற்றிய தகவலை இந்தச் செயலி அரசுக்கு தெரியப்படுத்தும்.

எங்கெல்லாம் செல்வது அபாயகரமானது என்று இதை பயன்படுத்துவோர் இந்தச் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இந்தச் செயலியை பயன்படுத்த முடியும்.

கொரோனாவை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் உதவுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்தை கண்டு பிடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தின் சுகாதார அதிகாரிகள் இத்தகைய செயலி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தொழில்நுட்பம், மொபைல் செயலி என பல வழிகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிரிட்டன் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிக் டேட்டா இன்ஸ்டிடியூட் மற்றும் நஃபீல்ட் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட ஆய்வு ஓர் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

எந்தச் செயலியாக இருந்தாலும் ஒரு தனி நபர் தனது அன்றாட வாழ்வில் இயங்கும்போது, அந்த நபரை ஜி.பி.ஸ் மூலம் பின்தொடர வேண்டியுள்ளது என்று இந்த ஆய்வில் கூறப்படுகிறது.

மேலும், ஜி.பி.எஸ் அல்லது பிலுடுத்திற்கு போதுமான சிக்னல் இல்லாத இடங்களில் ஒரு கியூ.ஆர் கோடை பயன்படுத்தினால் அதன் மூலம் ஒருவரை பின்தொடர முடியும்.

ஒருவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், அல்லது கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வீட்டில் இருந்தபடி பரிசோதனை மேற்கொள்ள உதவியை அணுக வேண்டும்.

பிறகு பரிசோதனை முடிவுகளில் கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சமீபமான நாள்களில் உங்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களுக்கு அலைபேசி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும்.

மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர்களுக்கு தங்களுடன் பழகிய யாருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என பெயர் தெரியப்படுத்தப்படாது. ஆனால், உடனடியாக 15 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். கூடுதலாக அவர்கள் பணியாற்றும் இடமும் அவர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்களும் சுத்தப்படுத்தப்படும்.

நாட்டில் முடக்கநிலை அமலாவதை தவிர்க்க உதவும் அளவுக்கு தற்போது இந்தச் செயலி உருவாக்கப்படுகிறது. இந்தச் செயலியின் மூலம், கூடுதல் தகவல்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. "இதனால் கணிசமான எண்ணிக்கையிலான உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் பிரிட்டன் சுகாதார அமைப்பினர் நம்புகின்றனர்''.

இந்தச் செயலியை அனைவரும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, இதில் உணவு மற்றும் மருந்து பொருட்களை ஆர்டர் செய்யும் வசதிகளும் இணைக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார நிலையங்களின் விவரங்களையும் இந்த செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சீனாவில் இருந்த கொரோனா செயலி

இதேபோன்ற ஸ்மார்ட்ஃபோன் மென்பொருள் ஒன்று ஏற்கனவே சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பிரிட்டனில் உள்ள கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவில் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே பொது போக்குவரத்து அல்லது பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆக்ஸ்போர்டு ஆய்வில் ஈடுபட்டுள்ள நெறிமுறை நிபுணர்களில் ஒருவர் கூறுகையில், சீனாவை போல இங்கிலாந்தில் இதேபோன்ற ஏற்பாடுகள் பொருத்தமாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்கிறார். எனவே தனியார் நிறுவனங்கள் இன்னும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

''எனக்கு மிகவும் பிடித்தமான உணவகத்தில், எனக்கு நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்த பின்னரே என்னை உள்ளே அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை பரிசோதிக்க ஆரம்பித்தால் இந்த தொற்றை கட்டுப்படுத்தலாம்,'' என்று பேராசிரியர் மைக்கல் பார்க்கர் கூறுகிறார்.

அதேபோல முதியோர் காப்பகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தச் செயலியை பயன்படுத்த முன்வர வேண்டும். அதாவது எளிதாக தொற்று பரவும் இடங்களில் பணி புரியும் ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் மைக்கேல் வலியுறுத்துகிறார். பிரிட்டனில் இந்தச் செயலியை பயன்படுத்த பொதுமக்கள் கட்டாயப் படுத்தப்பட கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

அனைவரும் இந்தச் செயலியை பயன்படுத்தினால் மட்டுமே, நோய் தொற்று பரவுவதை தடுக்க இந்தச் செயலி உதவுமா என பேராசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''அனைவரும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஆனால், மொத்த மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது அவசியம்,'' என்றார்.

மேலும்,  உலகம் முழுவதும் பரவும் கொரோனா தொற்று தீவிரம் அடையும் சமயத்தில், இந்தச் செயலியின் திறன் அதிகப்படுத்தப்படலாம். அதாவது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கை செய்திகள் உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் விடுக்கப்படலாம்.

மூலம்: பிபிசி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X