2025 மே 03, சனிக்கிழமை

வியாழனின் சுற்றுப் பாதையில் ஜூனோ

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 05 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தினால் (நாசா - NASA) விண்ணுக்குள் ஏவப்பட்ட ஆளில்லா விண்கலமான ஜூனோ விண்கலம், வியாழனின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது.

புளோரிடாவிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 1.1 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவில் ஏவப்பட்ட இந்த விண்கலம், 2.7 பில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து, வியாழனின் சுற்றுப்பாதைக்குள், இலங்கை நேரப்படி இன்று காலை 9.23க்குப் புகுந்தது.

வியாழனின் சுற்றுப்பாதைக்குள் 20 மாதங்கள் தங்கியிருக்கவுள்ள ஜூனா, அங்கிருந்து சிறிய முட்டை வடிவிலான விண்பொருட்களை, வியாழனுக்குள் அனுப்பி, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராயும். இந்த விண்பொருட்கள் ஒவ்வொன்றும், தலா 14 நாட்களுக்கு நிலைத்திருக்கும். இந்தக் காலப்பகுதியில், வியாழனுக்குள் தண்ணீர் உள்ளதா என்பது தொடர்பாகவும், ஜூனோ ஆராயவுள்ளது. வியாழனின் அருகிலிருந்தான முதலாவது புகைப்படத்தை, எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி, ஜூனோ எடுக்கக்கூடியதாக இருக்குமெனவும், விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு முன்னர் நாசாவால் 1995ஆம் ஆண்டு முதல் 2003 வரை மேற்கொள்ளப்பட்ட விண்கல முயற்சியான கலிலியோ, வியாழனைச் சுற்றிய முதலாவது விண்கலமாகக் காணப்பட்ட நிலையில், வியாழனைச் சுற்றிய இரண்டாவது விண்கலமாக, ஜூனோ மாறியுள்ளது.

பூமியை விட 1,300 மடங்கு பெரியதான வியாழன், பூமியுள்ள சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் என்பதோடு, பூமியை விட சூரியனிலிருந்து 5 மடங்கு அதிக தூரத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X