2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மடு மாதாவின் ஆவணித்திருவிழா ஆரம்பம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 06 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று சிறப்புமிக்க மடுமாதாவின் ஆவணித் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கின்றன. யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு நடைபெறுகின்ற திருவிழா என்பதால் பெருமளவான கூட்டம் அலை மோதுகின்றது.

நேற்றை தினம் நாங்கள் மடு மாதா ஆலயத்துக்கு விஜயம் செய்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு ஒன்று கூடியிருந்தனர். நேற்று காலை ஆராதனையுடன் ஆரம்பமாகிய திருவிழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். பத்தாவது நாள் மடுமாதாவின் திருவுருவப் பவணி இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற எங்களுடன் மடுமாதா ஆலயத்தின் பரிபாலர் அருட்தந்தை டெஸ்மன் குளாஸ் அவர்கள் மனம்விட்டு கலந்துரையாடினார்கள்… ‘வரலாற்று புகழ்மிக்க இந்த மடு மாதாவின் திருவிழா 6ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பித்து எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு நடைபெறுகின்ற பேஸ்பர் வழிபாட்டுடன் ஒன்பது நாட்களை நிறைவு செய்யும். அதனை தொடர்ந்து மறுநாள் 15ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆயர்கள் தலைமையில் திருப்பலி இடம்பெற்று, மாதாவின் திருச்சொருபம் பவணி வரவுள்ளது. அன்றைய தினத்தில் மடு மாதாவை சுற்றியுள்ள சுமார் ஒரு கிலோமீற்றர் தூர சுற்றுவட்டத்திற்கு இச்சொருபம் கொண்டுசெல்லப்படும். அன்றைய தினத்துடன் மடு மாதாவின் திருவிழா நிறைவடைகிறது…’ என்று கூறிய அருட்தந்தையிடம் ஆலயத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி கேட்டபோது…

‘மடு மாதா பிரதேசத்தில் இப்பொழுது எந்தப் பிரச்சினையும் இல்லை. பாதுகாப்பு தரப்பினர் தாமாகவே முன்வந்து அடியார்களுக்கு உதவிசெய்கிறார்கள். எங்களுடன் எப்பொழுதும் பாதுகாப்புத் தரப்பினர் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் எமக்கு இல்லை. ஆகையினால் இம்முறை இந்தத் திருவிழாவிற்கு இன்னும் அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அப்படி வருகின்ற யாத்திரிகர்களுக்கு உரிய சௌகர்யங்களை எங்களுடன் இணைந்து பாதுகாப்புத் தரப்பினர் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இம்முறை மழை சரியாக இன்மையினால் தண்ணீர் வசதி சற்று குறைவாக இருக்கிறது. ஆகையினால் இங்கு வருகின்ற யாத்திரிகர்கள் அதற்குரிய முன்னேற்பாடோடு வருவது சாலச்சிறந்ததாகும். இருப்பினும் தண்ணீர் பிரச்சினைக்கும் பாதுகாப்பு தரப்பினர் பல ஒழுங்குகளை அமைத்து வருகின்றமையினையும் இங்கு நான் சுட்டிக்காட்டுகின்றேன்…’ என்று குறிப்பிட்டார்.

மடு மாதாவின் திருவிழாவிற்கு வருகின்ற யாத்திரிகர்கள் மாதாவின் வரலாற்று புகழினை உணர்ந்து புனிதத் தன்மையோடு வரவேண்டுமே தவிர சுற்றுலாத்தலமாக நினைத்து வரவேண்டாம் எனவும் யாத்திரிகர்களை அருட்தந்தை கேட்டுக்கொண்டார்கள்.

கம்பீரத் தோற்றத்தோடு காட்சிதரும் மடுமாதாவின் திருவிழா ஆராதனைகள் தமிழிலும் சிங்களத்திலும் காலை 6 மணிக்கும் 6.45 மணிக்கும் நடைபெறும். அதேபோல் மாலை 6.15இற்கும் 6.30இற்கும் நடைபெறும்.

இம்முறை இலங்கை ஆயர் பேரவை இந்த மடுமாதா திருவிழாவிற்கு ‘கிறிஸ்தவ குடும்ப வாழ்வு’ என்ற மையப் பொருளின் கீழ் போதனைகளை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.        Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .