Kogilavani / 2015 ஜூன் 15 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழப்பாணம் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
ஆலய உற்சவத்தில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், உணவு, குடிநீர், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் இதர தேவைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
ஆலயத்தில் பாதுகாப்புக் கடமைக்காக சுமார் 100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உற்சவ காலத்தில் தினமும் அதிகாலை 4.30 மணிமுதல் யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கி தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் சேவையில்; ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதிகாலை 6 மணிமுதல் குறிகட்டுவானிலிருந்து நயினாதீவுக்கான படகு சேவைகளும் நடைபெறவுள்ளது.
உணவு பொருட்கள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்களின் உரிய அனுமதி பெற்றபின்னரே, ஆலய வளாகத்தில் தமது வியாபாரங்களை மேற்கொள்ள முடியும். அத்துடன், பச்சை குத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கடற்படையினரின் பங்களிப்பும் இருக்கும்' என மாவட்டச் செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026