2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

வேடமிட்டு போதை ஊட்டி சுருட்டிய கும்பல் சிக்கியது

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கொ​ரோனா வைரஸ் பரிசோதனைகளுக்காகத் தாங்கள் வந்திருக்கின்றோம் என, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அறுவர் அடங்கிய குழுவொன்று, வீட்டில் இருந்தவர்களுக்குப் போதை மாத்திரைகளை வழங்கி, அவர்கள் அனைவரும் மயக்கம் அடைந்ததன் பின்னர், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களைச் சுருட்டிக்கொண்டோடிய சம்பவமொன்று, குருநாகல், மாஹோ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அறுவர் அடங்கிய அந்தக் குழுவில், நான்கு பெண்களும் ஆண்கள் இருவரும் அடங்கியிருந்துள்ளனர். அவர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அணியும் ஆடைகளை அணிந்து, வேடமிட்டுச் சென்று, இந்தக் கைவரிசையைக் காண்பித்துள்ளனர்.

​சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரையும், குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த பிரபல்யமான நடனக் கலைஞரை, குருநாகல் நகருக்கு நவம்பர் 26ஆம் திகதி இரவு வேளையில்  வரவழைத்து, மயக்க நிலை அடைவதற்கான மாத்திரைகளை அவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, அவரிடமிருந்த 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை, இந்தக் குழுவினரே அபகரித்திருந்தனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்​தேகநபர்கள், தங்களுடைய அலைபேசி​களை, இவ்வாறான குற்றச்செயல்களை மேற்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தி உள்ளனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்தக் குழுவைச் சேர்ந்த நான்கு பெண்களில், இருவர் தாயும் மகளும் ஆவர்.

அந்தக் குழு, வெலிவேரிய பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள்,  மினுவன்கொடையில் வர்த்தகர்கள் இருவரிடம்,  6 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள்,  அநுராதபுர பிரதேசத்தில் 60 வயது பெண்ணொருவரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையிட்ட தங்க நகைக​ளை, நீர்கொழும்பு, கொழும்பு –11, செட்டித்தெரு, குருநாகல், கேகாலை ஆகிய பிரதேசங்களிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் கடைகளில், அடகு வைத்துள்ளமையும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
நடனக் கலைஞரின்  கைப்பை, அவரது ஒரு ஜோடி செருப்பு, 3 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய், அலைபேசிகள் 21, வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார், போதை மாத்திரைப் பக்கற்றுகள் ஆகியன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .