Editorial / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொசேரியன் லெம்பட்
மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (28) அன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.
மன்னார் நகரசபை தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மதுபான சாலைகளில் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையை ஐந்து மாதங்களுக்கு முழுமையாக நிறுத்தித் தருமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இடம்பெற்ற நீண்ட வாதப்பிரதிவாதங்களின் இறுதியில், மதுபான விற்பனையாளர்களின் சம்மதத்துடன் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டது.

அதன்படி, மன்னார் நகர்ப் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் நேரடி கள் விற்பனையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இயங்காமல் இருக்கும் 'உயிலங்குளம் கள் உற்பத்தி நிலையத்தை' மீண்டும் முழுமையான அளவில் இயங்கச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மதுவரித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் உள்ளூர் கள்ளினைத் தரமான முறையில் போத்தல்களில் அடைத்து, வெளிமாவட்டங்களுக்குச் சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைமுறைகளை மதுபான சாலை உரிமையாளர்கள் முறையாகப் பின்பற்றுவதை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பதுடன், உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
இந்தத் தீர்மானங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தின் தென்னை மற்றும் பனை சார் கள் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுவதோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
18 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
4 hours ago