2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஒலுவில் கடலில் தத்தளித்த 138 பங்களாதேஷியர் மீட்பு; ஒருவர் பலி

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.மாறன்


அம்பாறை, ஒலுவில் கடல் பிரதேசத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த 138 வெளிநாட்டவர்களை கடற்டையினர் மீட்டுள்ளனர். கடலில் தத்தளித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துமுள்ளார்.

பங்களதேஷில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுகொண்டிருந்த பங்களதேஷ், மியான்மார் நாடுகளைச்சேர்ந்த 138 பேர் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோதே நேற்று நள்ளிரவில்  கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஒலுவில் கடலில் 70 மைல்களுக்கப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த வெளிநாட்டவர்களை நேற்று இரவு 11 மணியளவில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இப்படகில் பங்களதேஷைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் மியான்மாரைச் சேர்ந்த 11 பேரும் பயணித்துள்ளனர். இவர்களில் எட்டுவயதுக்குட்பட்ட சிறுவர்கள் 8 பேரும் பெண்கள் 3 பேரும் உள்ளடங்குகின்றனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு டோறா படகில் பயணித்தபோது அலையின் வேகத்தினால் படகு செல்லமுடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோதே கடற்படையினர்; இவர்களை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். உணவு கிடைக்காமையினால் ஒருவர் இறந்துள்ளநிலையில் மீட்டுள்ளதாகவும் மயக்கமுற்ற நிலையில் 2 பெண்கள் உட்பட 6 பேரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவு பொலிஸார்; தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த நான்கு நாட்களாக உணவுகள் இன்றி நடுக்கடலில் இருந்திருப்பதாக கடற்படையினரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மீட்கப்பட்ட அனைவரையும் ஒலுவில் கடற்படை முகாமில் தற்போது வைத்திருப்பதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X