2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் 25 ஆண்டு பூர்த்தி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் 25 ஆண்டுகள் பூர்த்தி விழா (வெள்ளிவிழா) நவம்பர் மாதம்
கொண்டாடப்படவுள்ளது.

இது தொடர்பாக  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று சனிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவிக்கையில்,

'1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் திகதி மகப்பேற்று மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலை தற்போது ஆதார வைத்தியசாலையாக வளர்ச்சியடைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள
கரையோர பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகின்றது.

இதனை நினைவுகூருவதற்கும் அதற்காக பங்களிப்பு செய்தவர்களை பாராட்டுவதற்கும் எதிர்கால அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்குமாகவே வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது.

25 வருட பூர்த்தி விழாவின்போது பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நவம்பர் 05ஆம் திகதி தொடக்கம் பிரதான நோய்களும் அதன் தாக்கங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கான கருத்தரங்குகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக மூன்று நாட்களுக்கு சுகாதார பொருட்கள் கண்காட்சி என்பனவும் இடம்பெறவுள்ளன.                     
வீதிகள் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்படுவதனால் வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு அவசர விபத்து சிகிச்சை பிரிவை ஆரம்பித்தல், வெளிநோயாளர் பிரிவை கட்டிமுடித்தல், மருத்துவ விடுதிக்கான உயர்த்தி, சிறுவர் விடுதிக்கான
உயர்த்தி என்பவற்றை பொருத்துதல், உள்ளக வீதி அபிவிருத்தி, கழிவு அகற்றுதல், திண்மக்கழிவு அகற்றுதல், குடிநீர், மின்சாரம் என்பவற்றை தேவைக்கேற்ப விஸ்தரித்தல், புதிய வீடமைப்பு திட்த்துடன் இணைந்ததாகவுள்ள 3 ஏக்கர் வைத்தியசாலைக்குரிய காணியில் அபிவிருத்தி மேற்கொள்ளல் போன்றன பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவித்தார்.
                                    
இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்களை கலந்து கொள்ளச் செய்யும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் விசேட வைத்திய நிபுணர் டாக்டர்.பீ.கே.இரவீந்திரன், டாக்டர்.வை.எல்.எஸ்.யூசுப், டாக்டர்.ஏ.எல்.எம்.அஜ்வத் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .