2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கணையாங்குழி பாலம் உடைவு; 700 ஏக்கருக்கும் அதிகமான நெல் அறுவடை பாதிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அட்டாளைச்சேனை - கணையாங்குழி நெல் வயல்களுக்குச் செல்வதற்கான பிரதான பாதையிலுள்ள பாலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக உடைந்து வீழ்ந்துள்ளதால் இப் பகுதிலுள்ள 700 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்களை அறுவடை செய்வதில் பாரிய இடர்கள் ஏற்பட்டுள்ளதாக இப் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

நெல்வயல்களின் அறுவடையினை முன்னிட்டு, உடைந்த பாலத்துக்குப் பதிலீடாக தற்காலிக பாலமொன்றினை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் தாம் பல முறை வேண்டுகோள் விடுத்திருந்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் சுட்டிக் காட்டினர்.

மேற்படி அட்டாளைச்சேனை - கணையாங்குழி நெல்வயல் பகுதியில் இம்முறை 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காணிகளுக்கான பிரதான போக்குவரத்துப் பாதையினை சிறிய ஆறொன்று ஊடறுத்துச் செல்வதால், அதைக் கடப்பதற்காக 2007 ஆம் ஆண்டு சிறிய பாலமொன்று அமைக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பாலமானது பாய்ந்து செல்லும் ஆற்று நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என மிக நீண்ட காலமாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அண்மைய வெள்ளப் பெருக்கு காரணமாக காணையாங்குழி நெற் காணிகளுக்குரிய பிரதான பாதையில் அமைந்திருக்கும் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதோடு, பிரதான பாதையின் பல்வேறு பகுதிகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இதனால், தற்போது கணையாங்குழி நெல் வயல் பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்துப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், நெற்காணிகளில் அறுவடையை மேற்கொள்வதில் பாரிய இடர்களை இந்தப் பகுதி விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.

அறுவடை இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்கும், அறுவடை செய்யப்பட்ட நெல்லினை ஏற்றிக்கொண்டு செல்வதற்குமான இயந்திரங்கள் - மேற்படி பாதை வழியாகவே பயணிக்க வேண்டியுள்ளதால் இப் பகுதி விவசாயிகள் தமது நெல் அறுவடையினை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தப் பாதையினை தவிர்த்து கணையாங்குழி நெல் காணிகளுக்கான மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவதாயின் சுமார் 40 கிலோமீற்றர் தூரம் சுற்றி வளைக்க வேண்டியுள்ளதாக இங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், தற்போதைய நிலையில் மாற்றுப் பாதையும் கடுமையாக சேதமடைந்து காணப்படுவதால் அந்த வழியாகவும் பயணிப்பதில் சிரமம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த விடயம் குறித்து இதற்குப் பொறுப்பான அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளருக்கு தாம் பல்வேறு தடவைகள் எழுத்து மூலமாக அறிவித்திருந்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளங்களில் அழிவடைந்தவை போக, எஞ்சியுள்ள தமது நெல் வயலினை அறுவடை செய்வதிலும் தாமதம் ஏற்படுமாயின், மேலும் பாரியளவு நஷ்டத்தினை தாம் எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது என்றும் இங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

எனவே, அறுவடையினை முன்னிட்டு தற்காலிக மாற்றுப் பாலமொன்றினை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்றும், தமது நெல் அறுவடை நிறைவு பெற்ற பின்னர், புதிய நிரந்தரப் பாலமொன்றினை அமைக்குமாறும் கணையாங்குழி வயற் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தவறும் பட்சத்தில், கணையாங்குழி பகுதியிலுள்ள 700 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் அறுவடைக்கான காலம் தாமதமாகும் போது  தற்போதைய அடை மழையில் நெல்வயல்கள் முற்றாக அழியடைந்து விடும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்.

இது இவ்வாறிருக்க, கணையாங்குழி வயற் பகுதியில் மேற்படி பாலத்தின் கீழாக ஓடிக் கொண்டிருக்கும் ஆறானது  அண்மைக்கால வெள்ளத்தின் காரணமாக பாரியளவு பெருக்கெடுத்துள்ளது. இதனால், ஆற்றினை அண்டிய நெற் காணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு சில அதிகாரிகளின் தாமதம் அல்லது அசமந்தப் போக்கு காரணமாக 700 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்களின் அறுவடைகள் இல்லாமல் போவது அல்லது தாமதமாகுவதை அனுமதிக்க முடியாது என்று இப் பகுதி விவசாயிகள் கூறுகின்றார்கள்.

எனவே, அட்டாளைச்சேனை - கணையாங்குழி நெல் வயல்களுக்குச் செல்வதற்கான பிரதான பாதையிலுள்ள பாலத்தினையும் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் உடனடியாக புனர்நிர்மாணித்துத் தருமாறு இப்பகுதி விவசாயிகள் மீளவும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கின்றனர்.



                                             

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X