2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கல்விக்கு பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும்'

Niroshini   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

“பிள்ளைகளின் விருப்பத்துக்கு ஏற்றாப்போல் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வித் துறைக்கு பெற்றோர்களாகிய நாம் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு இருப்போமானால் அவர்களின் எதிர்கால வாழ்வு சிறந்ததொரு வாழ்வாக அமையும்” என்று, மக்கள் வங்கி அக்கரைப்பற்று கிளையின் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் தெரிவித்தார்.

2014ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) அக்கரைப்பற்று மக்கள் வங்கிக் கிளையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பது பெற்றோர்களுக்காகிய பரீட்சையாகத்தான் இது கருதப்படுகின்றதே தவிர மாணவர்களுக்கல்ல. இந்த பரீட்சையில் சித்திபெற்று விட்டோம் என்றெண்ணி மற்றைய பரீட்சையில் தவறை விட்டுவிட வேண்டாம். மற்றைய பரீட்சைகள் தான் எமது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஒவ்வொரு வருடமும் பாராட்டியும் பரிசில்களை வழங்கியும் வருகின்றோம். இதனால் அம்மாணவர்கள் அவர்களின் கல்வி நடவடிக்கையில் அதித அக்கரை கொண்டவர்களாக காணப்படுவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் அம்மாணவர்களிடம் வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே அக்கரைப்பற்று மக்கள் வங்கி இதனை செய்து வருகின்றது.

சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைய தவறி விடுகின்றனர். இவ்வாறு சித்தியடையத் தவறுவது ஏனென்றால், அவர்கள் நினைக்கின்றனர் தாங்கள் சாதாரண தரத்தில் 9 ஏ சித்தியை பெற்றுவிட்டோம் உயர்தர பரீட்சையில் எப்படியும் சித்தியடையலாம் என்றெண்ணி சில மாணவர்கள் செயற்படுகின்றனர்.

சில மாணவர்களுக்கு தங்களின் பெற்றோர்களினால் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக தங்களின் விருப்பத்துக்கு மாறான துறையினை பெற்றோர்களுக்காக தெரிவு செய்வதனால் அம்மாணவர்களும் உயர்தர பரீட்சையில் சித்தியடைய தவறி விடுகின்றனர் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .