2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'ஜனாதிபதியின் கருத்தை கண்டிக்கும் உரிமை த.தே.கூ.க்கு இல்லை'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

குற்றப்புலனாய்வு, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தைக் கண்டிக்கும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என முஸ்லிம் உலமாக் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

உலமாக் கட்சியின் கல்முனைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தின் பொதுமக்கள் மீதான அத்துமீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், ஒரு சமூகம் பற்றி மட்டும் பேசும் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.

எதிர்க்கட்சியானது அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அதேவேளை,  தீமையான விடயங்களைக் கண்டிக்க வேண்டும். ஆனால், த.தே.கூட்டமைப்பானது அரசாங்கத்தின்; தீமையான விடயங்களுக்குத் துணை போவதுடன், தமது சமூகம் சார்ந்த விடயங்களுக்கான தீமையில்; மட்டும் எதிர்த்தரப்பாகச் செயற்படுகிறது' என்றார்.

'குற்றப்புலனாய்வுப் பிரிவு போன்றவை அரசியல் பின்னணியில் இயங்குகின்றன என்ற ஜனாதிபதியின் கூற்று வெறும் எழுந்தமானமான கூற்றாகத் தெரியவில்லை. நாட்டின் தலைவர் என்ற முறையில் அவற்றைச் சரியாகக் கணித்தே அவர் கூறுகிறார்.

உண்மையில் ஊழல், இலஞ்சம், நிதி மோசடிக் குற்றம் என்பதெல்லாம் கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு மட்டுமே சொந்தமானதாக த.தே.கூ. உட்பட இன்னும் பலர்; எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் எந்தவொரு அரசாங்கமும் நாட்டுக்கு விசுவாசமாகச் செயற்படாதபோது, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபயவுமே இலஞ்சம், மோசடி என்பவற்றுக்கு இடம் கொடுக்காமல் சரியான முறையில் யுத்தத்தை வழி நடத்தியதன் காரணமாக யுத்தத்தை வெல்ல முடிந்தது.

இவ்வாறு நாட்டுக்குப் பாரிய சேவை செய்த கோட்டாபயவையும் அரசியல் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்ஷவையும் தியாகத்துடன் சேவை செய்த இராணுவத்தினரையும் இன்று குற்றவாளிகளாகப் பார்ப்பது முறையா என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி தனது கருத்தைக் கூறியிருந்தார். அவரின் இக்கருத்து பாராட்டுக்குரியதே தவிர, அதனை த.தே.கூட்டமைப்புக்கு கண்டிக்கும் உரிமை இல்லை என்று உலமாக் கட்சி கூறிக்கொள்கிறது' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X