2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'த.தே.கூ, த.மு.கூ கட்சிகள் ஒருபோதும் பிளவுபடாது'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், எஸ்.தியாகு

ஜனநாயக நாடொன்றில் பலவிதமான கருத்துகள் காணப்படலாம். அவை மக்கள் சார்ந்த விடயமாயின், வரவேற்கக்கூடியதாகும். அவ்வாறே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள்ளும் பலவிதமான கருத்துகள் காணப்படலாம். ஆனால், இதனை வைத்துக்கொண்டு இந்த இரண்டு கட்சிகளும் இரண்டாகப் பிளவுபடும் என்று யாராவது  நினைத்தால், ஜனநாயகம் என்ன என்று தெரியாதவர்களாக அவர்கள் இருக்க வேண்டுமெனக்; கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மேற்படி இரண்டு கட்சிகளும்; ஒருபோதும் பிளவுபடாதெனவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஸ்;ண தேசிய பாடசாலையில் தொழில்நுட்பத்துறைக்கான  கட்டடத் திறப்பு விழாவும் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று திங்கட்கிழமை நடைபெற்றன. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கல்வி அமைச்சின் மூலமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி;கள் முன்னெடுக்கப்படுகின்றன. அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலும் அனைவரும் இணைக்கப்படுகின்றனர். ஏனெனில், இதற்கான பணம் மக்களுடையது என்பதுடன், என்னுடையதோ அல்லது நாடாளுமன்ற மற்றும்  மாகாணசபை உறுப்பினர்களுடையதோ அல்ல.

நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கான தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க முடியும். இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் என்பதை விட, நாம் என்று கூறும்போதே  அதற்குப் பலம் அதிகம்.  

இதனை உணர்ந்தமையாலேயே பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல கருத்துகளைக் கொண்டவர்களும் இங்கு வந்துள்ளனர். மக்களும் இதையே எதிர்பார்க்கின்றனர். மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு' என்றார்.

'தற்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும்  நான் சென்றுவருவதை சிலர் குறுகிய கண்ணோட்டத்துடன்; பார்க்கின்றனர். அவர்களிடம் நான் கூற விரும்புவதாவது,  கடந்த காலத்தில் குறுகிய கண்ணோட்டத்துடன் நாம்; செயற்பட்டதன் காரணமாக குறிப்பாக, மலையகத்தில் கல்வி மிகவும்  பின்தங்கிக் காணப்படுகின்றது. அவ்வாறே, வடக்கிலும் கிழக்கிலும் சில பகுதிகளில் கல்வியில் பின்னடைவு காணப்படுகின்றது. எனவே,   முன்னேற்றம் காணவேண்டுமாயின், நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

எம் அனைவருக்கும் தனியான அரசியல் உள்ளது. அதைத் தேர்தல் காலத்தில் மாத்திரம் கடைப்பிடிப்போம்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .