2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பொத்துவிலுக்கு விரைவில் குடிநீர்'

Niroshini   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யூ.எல். மப்றூக்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

பொத்துவில் பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகம், 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று தெரிவித்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் குடிநீரினை வழங்கும் பொருட்டு,  நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையிலான சனிக்கிழமை (26) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த  கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹகீம்,

'பொத்துவில் பிரதேசத்துக்கான குடிநீரினை நிலத்தடி நீர்க் குழாய்க் கிணறுகளினூடாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆயினும், இப்போதைக்கு 4 குழாய்க் கிணறுகள்தான் பாவனையில் உள்ளன. இதற்கு மேலதிகமாக, மேலும் 5 குழாய்க் கிணறுகளை பிரத்தியேகமாக நிர்மாணிப்பதற்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

இவற்றை பூரணப்படுத்திய பின்னர், இப்போதைக்கு வழங்கப்படுகின்ற 1,800 கனமீற்றர் அளவிலான குடிநீருடன், இன்னும் 2,000 கனமீற்றர் அளவு குடிநீரினை சேர்த்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.

'மேற்படி, நடவடிக்கைகள் அடுத்த 6 மாதகாலப் பகுதிக்குள் பூரணப்படுத்தப்படும். மேலும், நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் பாணமை, லகுகலை போன்ற எல்லாப் பிரதேசங்களுக்கும் போதியளவு குடிநீரினை வழங்கும் நோக்குடன், நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கும் தீர்மானமொன்றினையும் அமுல்படுத்தியுள்ளோம்.

அந்த நீர்த் தேக்கத்தினை அமைத்ததன் பின்னர் சியம்பலாண்டுவ, பொத்துவில், பாணம மற்றுல் லகுகல உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களுக்கும் பூரணப்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டமொன்றினை அமுல்படுத்தவுள்ளோம். இதற்கான அனுமதி அமைச்சரவையில் பெறப்படும்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X