Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
“பொதுபல சேனா போன்ற அமைப்புக்களின் இனவாதக் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துவதன் மூலமே சமூகங்களுக்கிடையிலான பிளவுகளையும் அமைதியின்மையையும் முடிவுக்குக் கொண்டு வரலாம்" என்று சுகாதார பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான பைசல் காசீம் தெரிவித்தார்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பொதுபல சேனா போன்ற அமைப்புக்களினால் முன்னடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்நாட்டு முஸ்லிம்கள் எப்போதும் நாட்டுக்காக விசுவாக இருந்திருக்கின்றார்கள். எல்லா சமூகங்களுடனும் ஐக்கியத்துடனும் பரஸ்பர ஒற்றுமையுடனும் வாழ்வதையே விரும்புகின்றார்கள்.
காலத்துக்கு காலம் இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை சீண்டி நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைந்ததை நாம் அறிந்ததாகும்.
அந்த வகையில்தான் பொதுபல சேனா அமைப்பும் அதன் செயலாளர் ஞானசார தேரரும் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டுள்ளனர்.
அளுத்கம நகரை பற்ற வைத்து அங்குள்ள முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தார்கள். பணக்கார வர்த்தகர்களாக இருந்து வியாபாரம் செய்த முஸ்லிம்கள் சில மணி நேரத்தில் தமது சொத்துக்களை இழந்து மற்றவர்களின் உதவியில் தங்களை நிலை நிறுத்த வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.
கொடுரமான மத வாதத்தை நிலை நிறுத்தி அதன் மூலம் முஸ்லிம்களையும் அவர்களது பொருளாதாரத்தையும் நசுக்குவதே பிரதான நோக்காகக் கொண்டு பொதுபல சேனாவும் அதற்கு உதவி புரிகின்ற தரப்புக்களும் செயற்படுகின்றார்கள்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களினாலேயே கடந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. இந்த உலகம் அறிந்த உண்மையாகும். மீண்டும் அவ்வாறான ஒரு நிலை வருவதற்கு நல்லாட்சி அரசாங்கம் இடம் கொடுக்காது என்று திடமாக நம்புகின்றேன் என்றார்.
“நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவித்து மக்கள் மத்தியில் அமைதியின்மை வளர்வதன் மூலம் தமது இலக்குகளை அடைந்து கொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றனர். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இன்று மட்டக்களப்பில் உள்ள ஒரு தேரர் அரசாங்க அதிகாரிகளை தாக்க முற்படுகின்றார். தனியாரின் காணிகளை அடாத்தாகப் பிடிக்க சத்தியாக்கிரகம் செய்கின்றார். இதனை கடுமையாகக் கண்டிக்கின்றேன். இவருக்குப் பின்னால் பொதுபல சேனா இருப்பதுதான் உண்மையாகும். கண்டி ஊர்வலத்தில் இந்த தேரரும் கலந்துகொண்டுள்ளார்.
இதேபோன்றுதான் இறக்காமம் மாணிக்கமடுவில் சிலை வைத்துள்ளனர். மக்கள் வாழாத ஒரு பிரதேசத்தில் இந்த சிலை வைத்திருப்பதன் நோக்கம்தான் என்ன? அரசியல் பின்னணியில் இந்த சிலையினை வைத்துள்ளனர்.
மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் இனவாதத்தை வலுவாக்கி தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பெரும்பான்மையின அமைச்சரான தயாக கமகே இன்று முற்பட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் நமது மக்கள் இவரை நம்பி ஆயிரக்கணக்கில் வாக்களித்தனர். என்ன நடந்தது. தனக்கு வாக்களித்த மக்களை கவனத்தில் கொள்ளாது அம்மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி ஓர் இனத்துக்கான பிரதிநிதி என்று நிரூபித்துள்ளார்” எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago