2025 மே 02, வெள்ளிக்கிழமை

'மு.கா. வின் செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகத்துக்கு தலைக்குனிவு ஏற்படும் நிலைமை'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளினால் தற்போதைய அரசியலிலும் பிற சமூகத்தின் மத்தியிலும் முஸ்லிம் சமூகமானது தலைக்குனிவு ஏற்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனக் கிழக்கு மாகண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையிலுள்ள அவரது  காரியாலத்தில் செவ்வாய்க்கிழமை (7) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.  

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'கிழக்கு மாகாணத்தில் மூவினச் சமூகங்களினுடைய பிரதிநிதிகளின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பதவிக்கு வந்தார். இதனை மறந்து மு.கா. வினதும் தனது நலனுக்காகவும் கிழக்கு மாகாண சபையையும்  அதிகாரிகள் சிலரையும் தவறான முறையில் அவர்  வழிநடத்திச் செல்கின்றார்.

பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் மட்டுமின்றி, மு.கா பிரதித் தலைவருமாக இருந்து கொண்டு அரசியலுக்காக மக்களுக்கு எந்தவித உண்மையும் இல்லாத பொய்களைக் கூறி வருவது அருவருக்கத்தக்க விடயமாகும்' என்றார்.

'தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகள், அம்மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்டு வரும் அதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 'எழுக தமிழ்' நிகழ்வையும்; மாகாண சபையையும் முறையாக வழிநடத்தி, அச்சமூகத்தின் உணர்வை  மதித்துச் செயற்படுகின்றார்.

மேலும், வடமாகாண சபையானது அம்மக்களுக்கான தீர்வுத்திட்டம், யோசனைகளை முன்வைத்து பிரேரணைகளை நிறைவேற்றியுள்ள சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாண சபையினால் எந்தவிதமான தீர்வுத்திட்ட முன்யோசனைகளும் வைக்கப்படவில்லை.

அரசாங்கம் கொண்டுவந்த விசேட அபிவிருத்திச் சட்டமூலத்தை வடமாகாண சபை உட்பட 8 மாகாண சபைகளும் நிராகரித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபை அதனை திருத்தம் செய்து வழங்குமாறு கோரியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு பக்கபலமாக இருந்த சிறுபான்மையினச்  சமூகத்தின்; பிரச்சினைகளை அரசாங்கம் பொருட்படுத்தாமல் உள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எதுவும்  பேசாமலும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையாவது வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தாமலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இருக்கின்றமை கிழக்கு மாகாணத்திலுள்ள மூவினச் சமூகங்களுக்கான வரலாற்றுத் துரோகமாகவே அமையவுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X