2025 மே 03, சனிக்கிழமை

“முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்”

Kogilavani   / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி.அன்சார்

“வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் வலயங்களைப் பாதுகாக்கப் போகிறோம்” என்ற போர்வையில்  இன்று  இனவாத சக்திகள், முஸ்லிம்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் வேலைத்திட்டத்தை  ஆரம்பித்துள்ளன. இதனை தடுத்து நிறுத்த, நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம்” என்று, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், நல்லாட்சி அரசாங்கத்துக்கும்  ஆசிவேண்டி விசேட துஆப்பிரார்த்தனை நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை  (08) சம்மாந்துறை பத்ர் ஜூம்ஆப்பள்ளிவாசவில் பிரதான நம்பிக்கையாளர் கே.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“அகழ்வராய்ச்சி எண்ணும் போர்வையில் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் ஆய்வுநடவடிக்கைகள் தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்விடங்களை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது. இது சிறுபான்மை மக்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

நாட்டின் சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் மைத்திரிபால   சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், சிறுபான்மை மக்கள் இன்று அரசாங்கத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையே காணப்படுகின்றது.

இன்றைய ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் பங்காளியாக இருந்து, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதை விடவும் பலமடங்கு இந்த சமூகத்தின் உரிமை குறித்த பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வை காண்பதில் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

எதிர்வருகின்ற நாட்கள்  அரசியல் அரங்கில் முக்கியமான காலமாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு, தேர்தல் முறை மாற்றம், புதிய அரசியலமைப்பு  அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த அரசியல் யாப்பில், சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்கின்ற மிகப்பெரிய பொறுப்பை நாங்கள் சுமந்து கொண்டிருக்கின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X