Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 04 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,பி.எம்.எம்.ஏ.காதர்
இலங்கை தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் முஸ்லிம் தேசம் பற்றிய கருத்தாடலை நாம் மீண்டும் உரக்கச் சொல்வதற்கான அவசியத்தினை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்; மாணவர் அமைப்பு இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முஸ்லிம் தேசம் பற்றிய பிரக்ஞையினை உலகறியச் செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மீண்டும் ஒருமுறை இந்நாட்டின் தனித் தேசிய இனமான முஸ்லிம்கள் பற்றியதொரு இதை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
முஸ்லிம் தேசமும் அதன் சுயநிர்ணயமும் குறித்த மிக நீண்ட கலந்துரையாடல்கள் அவசியப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்கள், எதிர்காலத்தில் அவர்களை நோக்கி வரையப்போகின்ற தீர்வுகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அந்த வகையில் கடந்த காலங்களில் இந்நாட்டினை சிதைவடையச் செய்த கொடிய உள்நாட்டு யுத்தம் இலங்கையின் ஏனைய இனத்தேசியங்;களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு சற்றும் குறைவில்லாத அளவு முஸ்லிம் தேசியத்தினையும் பாதிக்கச் செய்துள்ளதனை நாம் அறிவோம்.
ஒரு புறம் தமிழ் தேசியத்தினுள் முஸ்லிம் தேசத்தினை சிறைபிடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. மறுபுறம் சிங்களப் பேரினவாதம் தமிழ் தேசியத்தினை சிதைப்பதற்கான ஒரு கருவியாக முஸ்லிம் தேசத்தினை உபயோகப்படுத்த முனைந்ததனையும் நாம் மறக்கவில்லை. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கின் உள்ளக சுயநிர்ணயத்தின் மேல் நிறுவப்பட்ட உறுதியான அரசொன்றினைக் கொண்டுநடத்துவதற்கு முஸ்லிம் தேசத்தின் பங்கு குறித்து தமிழ் தேசியவாதிகள் தெளிவான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை.
தேசிய இனச்சிறுபான்மையினர் மற்றுமொரு சிறுபான்மை தேசிய இனத்தினை இனச்சுத்திகரிப்புச் செய்யும் கொடூரமும் இம்மண்ணில்தான் நடந்தேறியது. அதுவே இறுதியில் தமிழ் தேசிய ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு பங்களிப்புச் செய்தது என்ற உண்மையினையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
எனினும் இன்று இந்நாட்டின் முப்பதாண்டு கால கொடிய உள்நாட்டு யுத்தம் முடிவுற்றுள்ளது. ஆனாலும் முஸ்லிம் தேசத்தினை நசுக்குவதற்கான சிங்களத்தின் வேலைத் திட்டங்களுக்கு எந்தக் குறையுமில்லை. தமிழ் தேசியமும் அவ்வப்போது முஸ்லிம் தேசத்தினை மறந்து விடுகின்ற, மன்னிப்புக் கோருகின்ற நிகழ்வுகளும் நடந்த வண்ணமே உள்ளன.
எனவே, முஸ்லிம் தனித்தேசியத்தின் பலதரப்பட்ட சக்திகளை ஒன்றுதிரட்டி ஐ.நா. விசாரணைக்கான கால எல்லையினை நீடிப்பதற்கும் அதன் மூலம் முஸ்லிம்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். அதன் மூலமே இலங்கை இன மோதல் குறித்த எதிர்கால அரசியல் தீர்வில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கினை பெற்றுக் கொள்ள முடியும்' என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago