2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'விரைவில் விடிவு பிறக்கும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,எஸ்.கார்த்திகேசு 

பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் சட்டவல்லுனர்கள் குழுவின் விசாரணை மூலம் எமது மக்களுக்குரிய நியாயமான தீர்வு  கிடைக்கும். ஐ.நா வின் மனித உரிமைப் பேரவையின் உதவியோடு தமிழர்களுக்கான விடிவு விரைவில் பிறக்கும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11)நடைபெற்ற சி.என். செல்வராசா ஞாபகார்த்த கிரிக்கெட் மற்றும் எம்.இராசநாயகம் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்தபோதும், அவ்வாறான மீறல்கள் நடைபெற்றுள்ளதாக சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு நடைபெற்ற மீறல்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு உரியவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது என்றார்.

மேலும், விரைவில் அம்பாறை மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும். அதனை அமைப்பதற்கான சம்மதத்தை நோர்வே நாட்டினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்தோடு திருக்கோவில் தாமரைக்குளம் பகுதியில் நான்கு தொழில்பேட்டைகள் உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகள் 105 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகின்றன. இதற்குரிய ஒத்துழைப்பையும் புலம்பெயர் அமைப்புக்கள் வழங்க முன்வந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.  

கழகத்தின் முன்னாள் தலைவர் ஏ.நோயல் அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன, மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரி பணிப்பாளர்  எஸ்.ஜெயபாலன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X