2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அடிப்படை வசதிகளின்றி அஷ்ரப் நகர மக்கள் சிரமம்

Kogilavani   / 2010 நவம்பர் 23 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஆர்.அஹமட்)

ஒலுவில், அஷ்ரப் நகரில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகளின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இத்தேவைகளை நிறைவேற்றித்தரும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
    
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றக் கிராமமான அஷ்ரப் நகரில் வாழும் மக்கள் குடிநீர் வசதி,  மையவாடி வசதி,  போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாது இருப்பதுடன், அடிக்கடி காட்டு யானைகளின் தொல்லைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

நீர் வசிதியை பெற்றுக்கொள்ள இரண்டு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் நீர் வற்றிக் காணப்படுவதால் மக்கள் நீண்ட தூரம் சென்றே நீரை எடுத்து வர வேண்டிய நிலை  உள்ளது.

இக்கிராமத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு மையவாடி இல்லாதிருப்பதால், மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்காக 07 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஒலுவில் மையவாடிக்கு செல்ல வேண்டியிருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.

கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 05 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் வெளி இடங்களுக்கு செல்வதானால், இத்தூரத்தை கடந்துச்சென்றே பஸ் வண்டிகளை பெற்றுக்கொள்ளும் நிலைக் காணப்படுகின்றது.

மேலும், தரம் 06 இற்கு மேல் கல்வி கற்கும் மாணவர்கள் ஒலுவில் அல்-ஹம்ரா மகா வித்தியாலத்திற்கு கால் நடையாக சுமார் 7 கிலோ மீற்றர் சென்றே கல்வி கற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
    
இவ்வீதிகளில் மின்சாரம் இல்லாததால் இரவு வேளைகளில் பயணம் செய்பவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

எனவே இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அஷ்ரப் நகர மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .