2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'ஆசிரியர் வளம் சமநிலைப்படுத்தப்படும்போது தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வாய்ப்பு ஏற்

Suganthini Ratnam   / 2011 மே 12 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் முறையாக மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர் வளம் சமநிலைப்படுத்தப்படும்போது, அம்பாறை மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாமென கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

இலங்கை பூராகவும் கடமையாற்றி வந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளபோதிலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள 109 தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து கேட்டபோதே பணிப்பாளர் நிஸாம் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். இந்த நிலையில் தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனங்களை வழங்கி அதே மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் நியமிக்க முடியாது. ஏற்கனவே கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் முறையாகச் செய்யப்பட்டு, ஆசிரியர் வளம் சமநிலைப்படுத்தப்பட்டிருந்தால், அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும்.

அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக, ஆளுநரின் கவனத்திற்கு அரசியல்வாதிகள் கொண்டு வருகின்றனர். ஆனால், அம்பாறை மாவட்டத்தில் மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பதால் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியாமலுள்ளதையே ஆளுநரும் காரணமாகக் குறிப்பிடுகின்றார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக சிலரால் கூறப்படுகிறது. அதில் எவ்வித உண்மையுமில்லை. அம்பாறை கல்வி வலயத்தில் மேலதிகமாகவுள்ள 326 சிங்களமொழி மூல ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படும். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாகாணங்களைச் சேர்ந்தவர்கள். பல வருடங்களாக அவர்கள் அம்பாறையில் சேவையாற்றுகிறார்கள். எனவே, இவர்கள் இடமாற்றம் மூலம் அவர்களுடைய சொந்த மாகாணங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆசிரியர் இடமாற்றங்களின்போது, மாணவர்களுடைய கல்வி நடவடிக்கை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த விடயத்தில் மிகவும் நேர்மையாகவும் நீதியாகவும் செயற்பாடுகள் இடம்பெறும்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தின்போது, எவரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் கல்வியமைச்சர் போன்றோர் உறுதியாக உள்ளனர். அதேவேளை, இந்த இடமாற்றத்தில் எனக்கு எவ்வித விருப்பு வெறுப்புக்களும் கிடையாது. உயர் அதிகாரிகளின் பணிப்புரைகளுக்கமையவே நான் செயற்படுவேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X