2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்கு பல்கலையின் புதிய கட்டிட நிர்மாணத்துக்கு அனுமதி பெற பேச்சு

Menaka Mookandi   / 2011 ஜூலை 06 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்களுக்கான அனுமதியைப் பிரதேச சபையினூடாகப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய கொடுப்பனவை உரிய முறையில் தாமதமின்றி மேற்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழககத்தில் இடம்பெற்றது.

புதிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படும் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். இந்த அனுமதியினை வழங்கும் அதிகாரம் தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி அனுமதியினைப் பெற்றுக்கொள்ளும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு தொகைப் பணம் செலுத்தப்படுதல் அவசியமாகும்.

ஏற்கனவே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் போது, பிரதேச சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமை மற்றும் அதற்குரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படாமை தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் போது அவற்றுக்குரிய அனுமதியினை உரிய முறையில் பெற்றுக்கொள்வது மற்றும் அதற்கான கொடுப்பனவுகளை தாமதமின்றி பிரதேச சபைக்குச் செலுத்துவது தொடர்பில் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

இதன்போது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நாளாந்த திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உதவி தேவைப்படுவதாக உபவேந்தர் சுட்டிக் காட்டியதையடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை தான் உடனடியாக மேற்கொள்வதாக தவிசாளர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.முனாஸ் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X