2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தற்காலிக அடையாள அட்டைகளை  வழங்கிவருவதாக கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பதிகாரி ஏ.மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களின்; வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தற்காலிக அடையாள அட்டைகளை வெற்றிகரமாக வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் உள்ள பிரதேச செயலகங்களின் ஓத்துழைப்புடன் இந்த தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாகவும் இணைப்பதிகாரி ஏ.மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்; இதுவரையில் 850 பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  நடமாடும் சேவை மூலம் இதற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

கபே அமைப்பின் பிரதான குறிக்கோள்களாக தேர்தல் கண்காணிப்பு, தற்காலி அடையாள அட்டை வழங்குதல், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான வழிவகைகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவை உள்ளன.  அத்துடன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் முறையாக வாக்களிப்பதற்கான அடிப்படை அறிவூட்டல் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை துண்டுப்பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவரொட்டிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் 3 மாகாணங்களிலும் கடந்த சனிக்கிழமைவரை 86 தேர்தல் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 36 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் தேர்தல் சட்டவிதிகளை மீறிய 26 சம்பவங்களும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த 7 சம்பவங்களும் 5 அச்சுறுத்தல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X