2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேர்தல் மோசடிக்கான ஆரம்பப்படியாகவே அக்கரைப்பற்று சம்பவம் உள்ளது: ரவூப் ஹக்கீம்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அக்கரைப்பற்றில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வினை பொலிஸாரின் உதவியுடன் குழப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது பெரிய தேர்தல் மோசடியொன்றுக்கான ஆரம்பப்படியாகும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல என்பவர் இந்த சம்பவத்தின்போது மிகவும் பக்கச்சார்புடன் நடந்து கொண்டுள்ளார். இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில்தான் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அக்கரைப்பற்றுப் பிரதேசம் முதல் பொத்துவில் பிரதேசம் வரையிலான எல்லா வாக்குச்சாவடிகளிலும் வாக்கு மோசடிகள் இடம்பெற்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமையன்று முஸ்லிம் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த நோன்பு துறக்கும் நிகழ்வானது, குழப்பப்பட்டதையடுத்து அங்கு மிகமோசமான கலவரம் ஏற்பட்டது.

இவ்விவகாரம் குறித்து தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பொன்று மு.கா. தலைவர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

'அக்கரைப்பற்றில் திங்கட்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வுக்கு பொலிஸ் அனுமதியைப் பெறுவதற்காக ஐந்து, ஆறு நாட்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த நடவடிக்கையானது அக்கரைப்பற்று பொலிஸாரால் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டது.

ஆயினும், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறையிலுள்ள உதவிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கட்சித் தலைவர் என்கிற வகையில் பேசி இறுதி நேரத்திலேயே அந்த இப்தார் நிகழ்வுக்கான அனுமதியைப் பெறக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல என்பவர்; முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி மற்றும் அக்கரைப்பற்றிலுள்ள வேட்பாளர்களை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டதோடு, அக்கரைப்பற்றிலுள்ள அமைச்சர் அதாஉல்லாவுக்கு முழுக்க முழுக்கப் பக்கச் சார்பாகவும் நடந்து கொண்டார்.

அக்கரைப்பற்றில் ஓர் அமைச்சர் இருக்கும் போது, வெளியூர்களிலிருந்து அமைச்சர்களை ஏன் நீங்கள் இங்கு அழைத்து வர வேண்டும்? அதற்கு என்ன தேவை இருக்கிறது என்று கேட்டு, மோசமாக அதட்டுகின்ற பாணியில் எமது அமைப்பாளர் மற்றும் வேட்பாளர்களிடம் மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல நடந்துள்ளார்.

இது குறித்து உதவிப் பொலிஸ் மா அதிபரை நான் சந்தித்து முறையிட்டேன். அத்தோடு, கடந்த பல வருடங்களாக குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவின் நடவடிக்கையானது பக்கச் சார்பாக அமைந்து வருவது குறித்தும் உதவிப் பொலிஸ் மா அதிபருக்குத் தெளிவுபடுத்தினேன்.

இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல குறித்து – தேர்தல் ஆணையாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் முறையிட்டுள்ள பல ஆவணங்களையும், கடிதங்களையும் ஒரு கோவையாக நாம் வைத்துள்ளோம்.  

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுக்கு போக வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபர் என்னைத் தொடர்பு கொண்டு மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார். மேலும், இப்போது இருக்கும் கலவரங்களைச் சமாளிப்பதே கஷ்டமாக இருக்கிறது, இந்த நிலையில் அக்கரைப்பற்றில் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கு நீங்கள் போகாமல் இருப்பதே நல்லது.

அதையும் மீறி நீங்கள் செல்வதற்கு நேர்ந்தால் உங்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதற்கு நாம் முழு மூச்சுடன் ஏற்பாடுகளைச் செய்வோம் என்றும் அவர் என்னிடம் கூறினார். பொலிஸ் மா அதிபருக்கு நான் அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்தினேன்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து தற்போதைய தேர்தல் வரை, குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவின் நடவடிக்கைகள் மிகவும் பக்கச் சார்பாகவே இருந்து வந்துள்ளன.

இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல என்பவர் குறித்த இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்தவர்களை உரிய இடத்துக்குச் செல்ல விடாமல் பாதையை மறித்துக் கொண்டு தடுத்ததோடு, இப்தார் நிகழ்வினைக் குழப்புவதற்கு வந்த கும்பல்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றார்.

அதன்போது, எமது நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பக்கச் சார்பான நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். கலகக்காரர்களுக்கு எதிராகப் பிரயோகிக்க வேண்டிய கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நேற்றைய தினம பிரயோகிக்கப்பட்டது.
 
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வினை பொலிஸாரின் உதவியுடன் குழப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது பெரிய தேர்தல் மோசடியொன்றுக்கான ஆரம்பப்படியாகும்.  அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவின் மேற்பார்வையில்தான் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அக்கரைப்பற்றுப் பிரதேசம் முதல் பொத்துவில் பிரதேசம் வரையிலான எல்லா வாக்குச்சாவடிகளிலும் மோசடிகள் இடம்பெற்றன. ஏறத்தால 90 வீதம், 95, 98 வீதம் வரை வாக்களிப்பு நடந்த மிகப் பெரும் அதிசயம் நடந்தது.

குறித்த இந்த பொலிஸ் அத்தியட்சகரின் நடத்தை குறித்து நாம் தேர்தல் ஆணையாளருக்கு முறையிட்டதையடுத்து, தேர்தல் ஆணையாளர் தனது விசேட பிரதிநிதியாக பதுளையில் இருக்கும் உதவித் தேர்தல் ஆணையாளரை அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இங்கு வந்திருந்த உதவித் தேர்தல் ஆணையாளரும், இப் பகுதியில் பொலிஸாரின் பாரபட்சமான நடவடிக்கைகள் இடம்பெறுவதை தான் அவதானித்ததாகவும், இது தொடர்பில் மேலிடங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் என்னிடம் கூறினார்.

இந்தப் பிராந்தியத்தில் வாக்கு மோசடிகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. கடந்த பல தேர்தல்களில் அக்கரைப்பற்றிலும், அதற்கப்பாலுள்ள தமிழ் பிரதேச வாக்குச் சாவடிகளிலும் நேர்மையான வாக்களிப்பு இடம்பெறமுடியாத நிலையில் இருந்துள்ளது. குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றியானது - எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட வெற்றியாகும். இல்லையென்றால், கடந்த கிழக்குத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

சில வாக்குச் சாவடிகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றிருந்தமையை, அப்போதைய தேர்தல் ஆணையாளரிடம் நான் சுட்டிக்காட்டினேன். அதற்கு அவர், 'நிச்சயமாக ஒரு மோசடி நடந்துள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது, என்றாலும் - முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் எனக்குச் செய்வதற்கு வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லை. தேவையானால் நீங்கள் நீதிமன்றம் செல்ல முடியும். இருந்தாலும், மோசடி இடம்பெற்றுள்ளதை நான் ஏற்றுக் கொள்கிறேன்'  என்று கூறினார்.

எனவே, அக்கரைப்பற்று உள்ளிட்ட முழு அம்பாறை மாவட்டத்திலும் நீதி நியாயமானதொரு தேர்தல் நடைபெறும் வகையில், குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவை இடமாற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையாளர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மு.கா.வின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசனலி, மு.கா.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் மு.கா.வின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் சமூகமளித்திருந்தனர்.


  Comments - 0

  • Mohammed Hiraz Wednesday, 15 August 2012 06:32 PM

    கேட்பவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டும் என்பார்களாம்.

    Reply : 0       0

    dean Wednesday, 15 August 2012 10:50 PM

    Whom to believe

    Reply : 0       0

    eastbird Thursday, 16 August 2012 01:52 AM

    முன்கூட்டியே பொலிஸ் மா அதிபர் சொல்லியும் , அதை பொருட்படுத்தாமல் ஏன் போனார் ஹகீம் ?.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 16 August 2012 03:12 AM

    ஆக தேர்தல் நீதியாக நடைபெறப்போவதும் இல்லை நீங்கள் வெல்லபோவதும் இல்லை என சொல்ல வருகிறீர்கள்? அரசு எந்தவகையிலும் தோற்பதற்காக இந்த தேர்தலை முன்கூட்டி நடத்துகிறது?

    Reply : 0       0

    Fathima Thursday, 16 August 2012 04:57 AM

    ('அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுக்கு போக வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபர் என்னைத் தொடர்பு கொண்டு மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார்" )
    விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை.

    விழுந்தாலும் மீசையில் ம...')">Reply : 0       0

    Mohamed Thursday, 16 August 2012 05:55 AM

    இங்கு ஏதாவது உன்மைக்கு மாறாக இருக்கிறதா? நடந்ததை சொல்லியிறுக்கிறார்.

    Reply : 0       0

    Aboo Abdulla Thursday, 16 August 2012 06:26 AM

    பேய்கள் ஆள்கையில் சட்டங்கள் பிணம் தின்னும். நீங்கள் இன்னும் இந்த நாட்டின் நீதி அமைச்சரா. அதை முதலில் சொல்லுங்கள்!

    Reply : 0       0

    சிங்கம் Thursday, 16 August 2012 06:58 AM

    அக்கரைப்பற்றுக்கு போக விட்டால் ...... அதாவுல்லாவின் கோட்டைக்குள் போய் அவரின் மூக்கை தொட்டு விட்டு வந்திருக்கின்றேன் என்கிறயள்...... தடுத்தால் எங்களுக்கு கண்ணீர் புகை அடித்து விட்டார் என்கிறீர்கள்.

    Reply : 0       0

    நடிகன் Thursday, 16 August 2012 07:02 AM

    ஜனாதிபதித் தோ்தல் ஊழல் நிறைந்தது என்றதும் நீங்கள் தான்.... அரசோடு சேரும் போது இலங்கை மக்களின் ஏக பெரும்பான்மைத் தெரிவு மகி்ந்த தான் என்றதும் நீங்கதான்......

    Reply : 0       0

    vaasahan Thursday, 16 August 2012 07:16 AM

    கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் பின்னர் அவனிடம் அதிகாரம் இல்லாதபோது கண்ணை மூடிக்கொண்டு கல்லடிப்பதும் சிலரிடம் உள்ள பழ‌க்கம்.

    Reply : 0       0

    pottuvil vs Thursday, 16 August 2012 10:59 AM

    இந்த ஊருக்கு வந்தவரும் வரவிடாமல் தடுத்தவரும் யார்? வேரு இனத்தவரா?

    Reply : 0       0

    abcd Thursday, 16 August 2012 12:58 PM

    இந்த அரசியல் உங்களுக்கு அவசியம்தானா?

    Reply : 0       0

    Kanavaan Thursday, 16 August 2012 04:01 PM

    நீதி அமைச்சரான உங்களுக்கு இப்படியென்றால், ஏன் ஐயா நீங்கள் இன்னமும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். உடனேயே அரசாங்கத்தை விட்டு வெளியேறி விடவேண்டிவிட வேண்டியது தானே.

    Reply : 0       0

    nanpan Friday, 17 August 2012 01:53 AM

    ஒரு நோன்பாளி இப்தாரை மேற்கொள்ள வந்தவரை இப்தார் செய்யவிடாமல் தடுத்தவர் ஒரு உண்மையான முஸ்லிமா?? இல்ல இதுதான் நபி (ஸல் அவர்களின் வழி முறையா,???

    அக்கரைப்பற்றில் வன்முறையைத் தூண்டி குழப்பத்தை உண்டு பண்ணத் துணிந்தது.. அவர்தான்.. "அப்போ தலைவர் ரவூப் ஹக்கிம் சொன்னதில்" எதுவித பிழையுமில்லை..

    என்ன... கொமண்ட் பண்றீங்க...

    முதலில் "அல்லாஹ்வுக்கு" பயந்து வாழுங்கள்..
    பேச வந்துட்டாங்கள்.. ஒரு உண்மையான முஸ்லிமா இருந்து செயற்படுங்கள்..

    Reply : 0       0

    nanpan Friday, 17 August 2012 01:56 AM

    உண்மைதான்டா "நீதியே இல்லாத இந்த நாட்டில் நீதியமைச்சராக" இருக்கிறாரே தவறுதான்..

    இப்தார் செய்வதன் பயன் தெரியுமா?? நீங்கள் ஊரில் குழப்பத்தை உண்டு பண்ணி தேர்தலில் குழறுபடிகள் செய்வதுதான் நோக்கம்.. "அல்லாஹ்வுக்குப் பயந்து வாழுங்கள்.."
    வெற்றி நிச்சயம்.. பொருத்திருந்து பார்ப்பம்...


    இப்தார் செய்வதன் பயன் தெரியுமா?? நீங்கள் ஊரில் குழப்பத்தை உண்டு பண்ணி தேர்தலில் ...')">Reply :
    0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X