2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தனியாருக்கு நெல்லினை அடிமட்ட விலைக்கு விற்பனை செய்ய நேர்வதாக விவசாயிகள் கவலை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடையில் ஈடுபடும் விவசாயிகள் தமது நெல்லினை தனியார் கொள்வனவாளர்களுக்கு அடிமட்ட விலைக்கு விற்பனை செய்ய நேர்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை நெல் விளைச்சல் அதிகரித்துள்ளபோதும், அடிமட்ட விலைக்கே அவற்றினை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஏக்கரொன்றுக்கு 50 தொடக்கம் 60 மூடை வரையில் விளைச்சல் கிடைத்து வருகின்ற போதிலும் தனியாருக்கு கிலோ 21 ரூபாய் வீதமே விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விவசாயிகளிடமிருந்து நெற் சந்தைப் படுத்தும் சபையினூடாக அரசாங்கம் நெல்லினைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள போதும், விவசாயி ஒருவரிடமிருந்து ஏக்கருக்கு 50 கிலோவினை கொண்ட 10 மூடைகளையே நெற் சந்தைப் படுத்தும் சபை கொள்ளனவு செய்கின்றது.

நெல் சந்தைப் படுத்தும் சபையினர் இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு 28 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த வகையில், ஏக்கருக்கு 60 மூடைகளை அறுவடையாக பெற்றுக் கொள்ளும் விவசாயி ஒருவர் தனது 10 மூடைகளை மட்டும் நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்கி விட்டு, ஏனைய 50 மூடைகளையும் தனியாரிடம் அடிமட்ட விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த நிலையினைக் கருத்திற் கொண்டு, நெற்சந்தைப் படுத்தும் சபையினூடாக விவசாயிகளிடமுள்ள அனைத்து நெல்லினையும் அரசாங்கம் கொள்வனவு செய்தல் வேண்டும். அதேவேளை, நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையொன்றினை ஏற்படுத்தி அதை தனியார் கொள்வனவாளர்களும் பின்பற்றும் நடவடிக்கையொன்றினையும் அரசாங்கம் ஏற்படுத்துதல் வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X