2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடிவிடுமாறு உத்தரவு: அஸாத் சாலி

Super User   / 2012 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம். றம்ஸான்)


புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உத்தரவிற்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடி விடுமாறு முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஏ.எம். ஜெமீலை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் சாய்ந்தமருது பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

கல்முனை மாநகர மேயர் சிராஷ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே – ஆசாத் சாலி மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் முஸ்லிம் மக்கள் தம்முடன் இருப்பதாக, சர்வதேசத்துக்கும் ஐ.நா. சபைக்கும் காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. அதனால் தான், கிழக்கு மாகாண சபை 04 வருடங்களுடன் கலைத்து விட்டு, அவசர அவசரமாக கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை அரசு நடத்துகின்றது.

அதேபோன்று – தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் தம்முடன் இருப்பதாகக் காட்ட வேண்டிய தேவையுள்ளது. இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் தான் இன்று முஸ்லிம் சமூகம் உள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தீர்வுகளையும் அரசாங்கம் முன்வைக்கத் தயாராக இல்லை. அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, முஸ்லிம் நாடுகளின் ஆதரவு அரசாங்கத்துக்கு தேவைப்பட்டது.

அதேபோல், வீதிகளில் இறங்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாங்களில் ஈடுபடுவதற்கும் இங்குள்ள முஸ்லிம் மக்கள் தேவையாக இருந்தனர்.  ஆனால், இவை நடந்து இரண்டு வாரங்களுக்குள் தான் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளானது.

பிறகு அனுராதபுரம், குருணாகல் போன்ற பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்குள்ளானது. இப்போது மூதூரில் தனி முஸ்லிம் பிரதேசத்தில் ஒரு சிலையைக் கொண்டு வந்துவைத்துள்ளார்கள்.

வீதியில் காணுமிடங்களிலெல்லாம் சிலைகளை வைக்கின்றார்கள். ஆனால், பள்ளிவாசலைக் கண்டால் உடைக்கின்றார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் யாருடைய சொந்த நிலத்திலும் அமைக்கப்படவில்லை.

முஸ்லிம்களின் சொந்தப் பணத்தில் நிலம் வாங்கப்பட்டு பள்ளிவாசலுக்கென உரித்தளிக்கப்பட்ட பிறகே அங்கு பள்ளிவாசல்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இன்று இவ்வாறான பள்ளிவாசல்களில் தொழ முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

ராஜகிரியவில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வெளியில் பூட்டிடப்படுகிறது. பிரித் ஓதப்படுகிறது. இவற்றைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க வேண்டுமா?

தெஹிவளையிலுள்ள பள்ளிவாசல் இரண்டு வாரங்கள் மூடப்பட்டது. நாங்கள் சென்று மீண்டும் திறந்தோம். இப்போது அந்தப் பள்ளிவாசலை மூடுமாறு புத்தசாசன அமைச்சு - முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நபவியும், தெஹிவளைப் பள்ளிவாசலை மூடிவிடுமாறு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார். இதை நிரூபிக்கக் கூடிய ஆவணம் என்னிடமுள்ளது.

சரத் பொன்சேகாவையே எதிர்த்தவன் நான். மஹிந்த ராஜபக்ஷ எனக்கு ஒரு பொருட்டே அல்ல! என்னுடைய சமூகம் எனக்கு முக்கியமானது. ஏதற்காகவும் என்னுடைய சமூகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை.

நாங்கள் இங்கிருந்து கொண்டு இனவாதம் பேசுவதாக சிலர் சொல்கிறார்கள். இனவாதம் என்றால் என்ன? அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம். உன்னுடைய பங்கை நீ எடுத்துக் கொள், ஆனால் எனது பங்கில் கை வைக்காதே என்று சொல்வது எவ்வாறு இனவாதமாகும்?

இந்த அரசாங்கம் மிகப் பெரும் அநியாயங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறான அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருக்க வேண்டுமா என்று நான் கேட்க விரும்புகிறேன். இந்த தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் கட்சிகளையெல்லாம் ஒற்றுமைப்படுத்தும் காரியத்தை நாம் செய்தோம். ஆனால், அதற்கு நமது தலைவர்கள் உடன்படவில்லை.

முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் உருவாகும் போது நமது ஆட்சியாளர்கள் மிகவும் அநீதியாக நடந்து கொள்கின்றனர். பள்ளிவாசல்களில் அதான் சொல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

அப்போது, ஜனாதிபதியுடன் நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் அது குறித்துப் பேசினார்கள். ஜனாதிபதி என்ன சொன்னார்? நீதிமன்றம தீர்ப்பளித்திருக்கிறது, நான் ஒன்றும் செய்ய முடியாது என்றார். அதே நீதிமன்றம் தான் பெற்றோலுக்கு விலையைக் குறைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், அதை இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை.

பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனையே மீண்டும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து இந்திய அரசாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டாயிற்று.

ஏற்கனவே முஸ்லிம்கள் அதிகமான வாக்குகளை எடுத்திருந்தும் முஸ்லிம் முதலமைச்சர் கிடைக்காமல் போனது. கடந்த முறை ஏன் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது? நமக்குள் ஒற்றுமை இருக்கவில்லை.

ஆனால் இந்தத் தேர்தல் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுக்கும் தேர்தலாகும். எனவே, முஸ்லிம்கள் ஒன்று பட்டே ஆகவேண்டும். அவ்வாறு ஒன்று பட்டு மு.காங்கிரசுக்கு வாக்களித்தால் மட்டுமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றெடுக்க முடியும் என்றார்.

இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளர் யஹ்யாகான், மு.கா. வேட்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • nisfi Friday, 24 August 2012 05:30 AM

    இது பார்லிமென்ட் தேர்தல் அல்ல. முஸ்லிம்களின் கிழக்கு பூமிக்குரிய தேர்தல்... இங்கு நாம் மூன்று இன மக்களும் சந்தோசமா இருக்கம்... நீங்க தேர்தல் முடிய கொழும்புக்கு போய்டுவிங்க... கிழக்கு மாகாண மக்கள் நாங்க எங்க போறது..?? கிழக்கு தேர்தல் பற்றி மட்டும் பேசுங்க....

    Reply : 0       0

    faizal Friday, 24 August 2012 08:42 AM

    தெஹிவளை பள்ளிய நீங்க திறந்திங்களா????? அடப்பாவி... பள்ளிய திறக்கிறதிலயும் பொய்யா??? நீங்கலெல்லாம் மந்திரியாக‌ வந்தா மார்க்கத்தையே இலவசமா விப்பிங்க.. நீங்க உங்கள பாதுகாத்து கொள்ளுங்க... பள்ளிய அல்லாஹ் பாதுகாப்பான்....

    Reply : 0       0

    aathavan... Friday, 24 August 2012 08:57 AM

    ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிவாயல்களை விடுதலைப்புலிகள் உடைத்து, குண்டுவைத்து, தொழுதவர்களை சுட்டுக்கொன்று, அங்கிருந்த குர்-ஆன்களை தீமூட்டி அட்டூழியம் செய்தனர். அதுபற்றி இந்த அசாத் சாலி அவர்களுக்கு தெரியாதா? கிழக்கு மக்களுக்கு நீங்கள் அரசியல் சொல்லிக்கொடுக்கத்தேவையில்லை முடிந்தால் நீங்கள் இவர்களிடம் அரசியலைக் கற்றுக்கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    Suhaib Friday, 24 August 2012 09:01 AM

    இலங்கையில் 3 சமுகமும் ஒன்றாக வாழும் முக்கிய இடம் கொழும்பாகும். அங்கிருந்து வந்தவரிடம் கிழக்கு மாகாண மக்களின் வாயளவில் மட்டும் பேசுகின்ற ஒற்றுமை பற்றி உபதேசம் செய்கின்றமை பொருத்தமாகத்தெரியவில்லை.
    இரண்டாவது விடயம் பிரதேசவாதம் பேசுவதும் சிறந்த பண்பில்லையே நண்பரே.

    Reply : 0       0

    ABC Friday, 24 August 2012 09:18 AM

    பள்ளிவாசல்களை வைத்து அரசியல் நடத்தும் கேவலம்...

    Reply : 0       0

    kiyas Friday, 24 August 2012 03:38 PM

    சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...

    Reply : 0       0

    minver Wednesday, 29 August 2012 12:50 PM

    அனைவரும் இணைந்து ஒருமுறை வாக்களித்து பாருங்கள் ................... இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X