2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முஸ்லிம்களின் தேசியத்தை ஒளித்து மறைத்து பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்: ஹக்கீம்

Super User   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எம்.சி.அன்சார்)


முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும் என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மு.காங்கிரஸின் பிரசாரக் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பாலமுனையில் இடம்பெற்றது.

மு.காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான எம்.ஏ. அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்ட வேண்டுகோளினை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

"முஸ்லிம்களின் தேசிய உணர்வு தொடர்பான விடயங்களில் ஆளும் தரப்பினரைப் போலவே, தமிழ்த் தரப்பினரும் பெரியளவான அங்கீகாரத்தினை வழங்குவதற்குத் தயாராக இல்லை.

முஸ்லிம்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் அவர்கள் எங்களுடன் பேசட்டும். அவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் பேசி வருகின்றோம் என்று தமிழ் தேசியத் தலைமைகள் அடிக்கடி பேசுகின்றன. முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை இவ்வாறு ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும்.

இது தமிழ் தேசியத்துக்குள் நீண்ட காலமாக இருந்து வருகின்றதொரு நோயாகும். தந்தை செல்வாவின் காலத்துக்குப் பிறகு தமிழ் தேசியப் பரப்புக்குள் வந்துள்ள மிகப் பெரும் பிணி இதுவாகும். இது அகல வேண்டும்.

இந்தப் பிணியினை அகற்றுவதற்வதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளை நாம் பயன்படுத்துவோம். எங்களிடம் அதற்கான ஆயுதம் இருக்கிறது. எங்கள் ஆசனம் என்கிற ஆயுதங்களை நாடி வருகின்ற போது, இவற்றையெல்லாம் மிகத் தெளிவாகப் பேசுகின்றதொரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம் - ஆப்பிழுத்த குரங்காக அரசை மாற்றியிருக்கிறது. மேலும், எல்லா தரப்பினரும் - முஸ்லிம்களுடைய அரசியல் அந்தஸ்து எனும் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தூண்டுகிறதொரு நிலைமையினை இந்தத் தேர்தல் வியூகத்தின் மூலம் உருவாக்கியிருக்கின்றோம்" என்றார்.

இந்தக் கூட்டத்தில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மு.காங்கிரசின் வேட்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருமான ஏ.எல்.எம். நசீர், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வேட்பாளருமான ஏ.எம். ஜெமீல், கொழும்பு மாநகரசபையின் முன்னாளர் பிரதி மேயரும் மு.காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஆசாத் சாலி, அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக பெண்களுக்கு விளக்கமளிக்கும் பெண்கள் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மலையடி கிராமத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில்,

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனிநபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் நீண்ட காலம் வேண்டும். அது முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.  கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி நன்றாக ஒரு பழுத்த பழமாக இருக்கின்ற நிலையில் அதனை குத்திப் குத்தி பார்போமாயின் பழம் அழுகிப்போய்விடும்.

அதனை எவரும் தற்போதைய கட்சியின் நிலவரத்தில் என்ன விடயமென்று பழத்தினை பார்க்கின்ற மாதிரி குத்த வேண்டாம் என்று கட்சி அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்களை வேண்டிக் கொள்கின்றேன்.

எமது பலம் பழுத்த பழம் மாதிரி தேர்தலின் வெற்றிக்காக கனிந்து வருகின்ற இந்த பழத்தினை அழுக விட வேண்டாம். தேவையில்லாத சிறு சிறு பிணக்குகளை பெரிதுபடுத்தி இதில் ஏதோ பின்புலம் இருக்கின்றது என்று புரிந்து கொண்டாலும்  கட்சி அபிமானிகள், ஆதரவாளர்கள் இன்று முதிர்ச்சியுள்ளவர்கள் காலம் காலமாக இக்கட்சிக்குள் நடக்கின்ற அநீயாயங்களை பற்றி அடையாளம் கண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையிலேயே கொஞ்சம் அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்யும் என்றாலும் அவற்றினை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

தனிநபர்களின் அரசியலில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களின் விளைவாகத்தான் எமது கட்சிக்குள் பிளவுகள் வந்துள்ளது. கட்சிக்குள் ஏதாவது பிளவுகள் பிரச்சினைகள் ஏற்பட்டால் தனிநபர்களுடைய அரசியல் அந்தஸ்துடைய பிரச்சினைகளிலே ஏற்படுகின்ற தடுமாற்றங்களின் பி்ன்னணிலே ஏதாவது கொள்கை ரீதியான விசயங்களை கொஞ்சம் துாக்கிப்பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையில் பிரிகின்றோம் என்று சொன்னாலும் இந்த கட்சி சந்திக்கின்ற எல்லாப் பிளவுகளும் ஏதோ அடிப்படையில் தனிநபர் அரசியல் அந்தஸ்து சம்பந்தமான பிணக்கு பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டது. என்பதனை நான் சரியாக அடையாளம் கண்டுள்ளேன்.

கொள்கை ரீதியாக கட்சிக்குள் பிளவுகள் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று எவறாவது சொல்லியிருந்தாலும் கொள்கையை வெறும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சினைகளின் பிரதிபலிப்பாக துாக்கிப்பிடித்தால் ஒழிய உண்மையில் அது தனிநபர் அரசியல் அந்தஸ்து சம்பந்தமான பிரச்சினைகளின் வெளிப்பாடு என்றுதான் சொல்லலாம்.

இன்றைக்கு இருப்பது தனிநபருடைய அரசியல் சம்பந்தமான பிரச்சினையல்ல. இன்று இருப்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சம்பந்தமான பிரச்சினையாகும். தேர்தலின் மூலம் மக்கள் தருகின்ற அரசியல் அதிகாரத்தினை எமது சமூகம் இழந்துள்ள அனைத்தினையும் மீட்டிக்கொள்கின்ற ஒரு வழியாக கிழக்குத் தேர்தல் அமையுள்ளது.

கிழக்கு மாகாண ஆட்சியில் இதுவரைக்கும் எதனையும் அனுபவிக்கவில்லை. எதிர்க்கட்சியில்தான் இருந்து வந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுயில்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலவரத்தினை தனித்துப் போட்டியிட்டதனால் ஏற்படுத்தியுள்ளோம்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் இன்றைக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் பலத்தினைதான் நம்பியுள்ளார்கள். ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் இன்று அமைதியாக நிம்மதியாக தங்களது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சுழலில்தான் அவர்கள் எதிர்பார்த்திருப்பது முஸ்லிம்களுடைய பலத்தினைக் காட்டுவதற்கு இடம் தேவை எனின் அது கிழக்கில்தான் காட்டலாம். எனவே எதிர்வருகின்ற இத்தேர்தலில் தாய்மார்கள் சகோதரிகள் எல்லோரும் ஒன்றினைந்து எமது கட்சியின் வெற்றிக்கான பணியில் ஈடுபட்டு எமது சமூகத்தின் இருப்பை பாதுகாக்க வேண்டும்' என்றார்.

இதில் வேட்பாளர்களான ஐ.எல்.எம்.மாஹிர், எம்.ஐ.எம்.மன்சுர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.முஸ்தபா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பெரும்திரளான பெண்களும் கலந்துகொண்டனர்.






  Comments - 0

  • Kanavaan Saturday, 25 August 2012 02:36 PM

    ஐயா ஹக்கீம், நீங்கள் என்ன பேசுறியள். உங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது ஆளும் தரப்பினரா அல்லது தமிழ்த் தரப்பினரா? இருவரும் தான் என்றால் ஏன் அரச தரப்பினருடன் ஒட்டிக் கொண்டு தமிழ்த் தரப்பினரை மட்டும் தூற்றுகிறீர்கள்? தமிழ்த் தரப்பினரால் அமைச்சுப் பதவி தரமுடியாது என்பதாலா.

    Reply : 0       0

    Ahamed Saturday, 25 August 2012 07:30 PM

    அம்பாறையில் வந்து தனித்துவம் பேசும் ஹக்கிம் ஏன் அனுராதபுரம் பொலன்னறுவையில் தனித்துவமான மரத்தில் போட்டி இடவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X