2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அம்பாறை தொழிற் பயிற்சி நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை தொழிற்பயிற்சி நிலையம், உகண வீதியில் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மோகன்லால் கிரேரு, புதிய கட்டிடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எச்.ரி.டி.ஆர்.எஸ்.விஜேசிங்க தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம, அதிகார சபையின் பதில் தலைவர் லெஸ்லி வீரமந்திரி மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பியூம் பெரேரா ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

முன்னர் தொழிற் திணைக்களத்திற்கு சொந்தமாக காணப்பட்ட கட்டிடத்திலேயே இதுவரை காலமும் அம்பாறை பயிற்சி நிலையம் இயங்கி வந்தது. இங்கினியாகல வீதியில் அமைந்திருந்த இந்நிலையம் போதுமான பௌதீக வசதிகளை கொண்டிருக்கவில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முன்னாள் உதவிப் பணிப்பாளர் எச்.ரி.எச்.எம்.சஹீட் மேற்கொண்ட முயற்சியையடுத்து உகண வீதியில் காணி ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனையடுத்து, ஜப்பான் அரசாங்கத்தின் பங்களிப்புடன் இக்காணியில் கட்டிடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (யூ.என்.டி.பி) முன்வந்தது.

அதற்கமைய நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது பணியாற்றிய உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபிர், பயிற்சி முகாமையாளர் எம்.பி.நளீம் ஆகியோரும்; நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து நிலையத்தை திறப்பதற்கு செயற்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் இந்த நிலையத்தை உடன் திறப்பதற்கான துரித நடவடிக்கைகளை அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேற்கொண்டார். அந்த வகையில்; கட்டிட நிர்மாணப் பணிக்கென யூ.என்.டி.பி. 14 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. நிலம் மற்றும் பயிற்சி உபகரணங்களின் பொருட்டு அதிகார சபையானது 23 மில்லினுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளது.

நிந்தவூரில் அமைந்துள்ள தொ.ப.அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தின் கீழ் இயங்கும் இப்புதிய பயிற்சி நிலையமானது -  அழகுக் கலை, மின்னிணைப்பு தொழில்நுட்பம், வாகன தொழில்நுட்பம், சாரதிப் பயிற்சி, ஆடைத் தொழிற்சாலை தரக் கட்டுப்பாடு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் போன்ற பயிற்சிநெறிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X