2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இஸ்லாத்துக்கு எதிரான கார்டுன் படம் தயாரிக்கப்பட்டமைக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்டூன் படத்தை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்யாமல் உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளாவது,

'உலகின் பல பாகங்களிலும் எமது இஸ்லாம் மார்க்கத்தையும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நிந்தனை செய்து இழிபடுத்தி மோசமாக சித்தரித்து அடிக்கடி கட்டுரைகளும் கேலிச் சித்திரங்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்திற்கு எதிரான பெரிய சக்தி ஒன்று இயங்கி வருவதையே இச்சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் அந்த சக்தி இஸ்லாத்தை அழித்தொழிக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டாலும் கூட அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறப் போவதில்லை. மாறாக இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.

தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருக்கும் கார்டூன் படமானது இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மிக மோசமான தாக்குதலாகும். எமது உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை நிர்வாணமாக சித்தரிக்கும் காட்சிகள் உலக முஸ்லிம்களை கொதித்தெழச் செய்துள்ளது. கடந்த இரு வாரகாலமாக உலகில் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாமல் அங்கும் இங்கும் மூளை முடுக்குகளிலும் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இலங்கையிலும் இடம்பெறுகின்ற கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம். இந்த விடயத்தில் அரசியல் மற்றும் மார்க்கக்கொள்கை வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்த சக்தியாக வீதியில் இறங்கி போராடுவதும் அதற்கு மாற்று மதங்களை சேர்ந்த சகோதரர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதும் அதற்கு இந்த நாட்டு அரசாங்கம் கூட ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு பெரும் எச்சரிக்கையான செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

உலகில் எந்த நாடாக இருந்தபோதிலும் ஜனநாயகம், மனித உரிமை மீறல்,  சட்டம் என்று கூறிக்கொண்டு மூக்கை நுழைத்து சர்வதேச பொலிஸ்காரனாகவும் நீதிபதியாகவும் செயற்படுகின்ற அமெரிக்க வல்லரசு நிர்வாகம்,  தனது நாட்டில் இடம்பெறுகின்ற சட்டத்திற்கும் தர்மத்திற்கும் முரணான இத்தகைய படுமோசமான செயல்களை ஆதரித்து ஊக்குவித்து வருவதானது மிகக் கண்டனத்திற்குரிய விடயமாகும். இது எதிர்காலங்களில் சர்வதேச மட்டத்தில் பாரிய எதிர்விளைவுகளையும் அனர்த்தங்களையும் கொண்டு வரும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஆகையினால் உலக முஸ்லிம்களின் இதயங்களைக் காயப்படுத்தியுள்ள இப்படத்தை உடனடியாக தடை செய்வதற்கு அமெரிக்க நிர்வாகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

அதுவரை இதற்கெதிரான உலக முஸ்லிம்களின் பலமான போராட்டம் தொடரும் என்றும் அது இன்னும் பல விதங்களில் விஸ்பரூபம் எடுக் கும் என்றும் கூற விரும்புகின்றோம்' என்றார்.

  Comments - 0

  • rima Thursday, 20 September 2012 09:40 AM

    அது கார்டூன் அல்ல, அது எமது முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

    Reply : 0       0

    iibnu aboo Sunday, 23 September 2012 02:40 PM

    ரிமா வெரி குட். நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். அரசியல்வாதிகள் இப்படித்தான். எவ்வளவு சீரியசான விடயம். அதை விபரமாக அறிந்துகொள்ளாமல் அதுவும் அடிப்படை விசயம் தெரியாமல் கண்டன அறிக்கை விடுகிறார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X