2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு முதலமைச்சரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டுள்ளன: நஸீர்

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


'கிழக்கு மாகாண முதலமைச்சர் அநேகமாக எல்லா விடயங்களையும் ஆளுநரிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய இரண்டு கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளன. இவ்வாறானதொரு நிலையிருந்தால் இந்த மாகாணசபையினை கொண்டு நடத்துவது கேள்விக் குறியாகும். தனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்ற முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் மாற வேண்டும்' என்று கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தின் முதலமைச்சர் செயலகத்துக்கான குழுநிலை விவாதம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

'கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் ஏராளமான திணைக்களங்களும் செயலகங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவற்றுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் கீழ் இவ்வளவு திணைக்களங்களும் செயலகங்களும் இருப்பதாக ஒரு தோற்றப்பாடு இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், இவை அனைத்தும் முதலமைச்சரின் கீழ்தான் செயற்படுகின்றனவா என்கிற கேள்வி எனக்குள் இருக்கிறது.

இந்த முதலமைச்சர் எல்லா விடயங்கள் குறித்தும் ஆளுநரிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையாக உள்ளது. இப்படியொரு நிலையிருந்தால் இந்த மாகாணசபையினை எவ்வாறு கொண்டு செல்வதென்பது கேள்விக் குறியாகவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் இங்குள்ள மூவின மக்களுக்கும் நியாயமான முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். ஆனால், அவருடைய இரண்டு கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்திலுள்ள 1.8 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவினிலே முதலமைச்சரின் கீழ் வருகின்ற திணைக்களங்களுக்கும், செயலகங்களுக்குமான தொகைகளைக் கழித்து விட்டுப் பார்த்தால், கிழக்கு மாகாண சபையின் ஏனைய அமைச்சுகள் அனைத்துக்கும் வெறும் 600 மில்லியன் ரூபாய்தான் வழங்கப்படுகிறது.

அவ்வாறு ஒதுக்கப்படுகின்ற தொகைகளிலும் பல மில்லியன் ரூபாய்கள் வெட்டியெடுக்கப்படுகின்ற போது, இந்த மாகாணசபையில் எந்தவொரு வேலைத் திட்டத்தினையும் முழுமையாகச் செய்ய முடியாது.

ஜனாதிபதியவர்களும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷீல் ராஜபக்ஷ அவர்களும் இந்த நாட்டில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் நியாயமான முறையில் சேவைகளைச் செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால், கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் ஏன் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாததொரு நிலை உள்ளது என இந்த சபையிலுள்ள எல்லோரும் கேட்கின்றார்கள்.

எனவே, கிழக்கு மாகாணத்தின் இந்த நிலை மாற வேண்டும். தனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்ற முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் மாற வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். அவ்வாறு நிகழாது போனால், இங்குள்ள நாம் எல்லோரும் வெறும் வாய்ப் பேச்சாளர்களாக மட்டுமே இருக்கும் நிலை ஏற்படும். மூவின மக்களுக்கும் உயர்தரமான சேவைகளை வழங்குகின்ற முதற்தரமான மாகாணசபையாக கிழக்கைக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிற எமது ஆதங்கம் வெறும் கனவாகத்தான் இருக்கும். 

கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியாயமாகவும் நேர்மையாகவும் தன்னுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்துகின்றார். அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கோ எனது அமைச்சுக்கோ இதுவரைவில் பிரதம செயலாளர் எதையும் செய்யவில்லையென்றாலும் - அவரின் நேர்மைக்கு நன்றி செலுத்துவது இந்த இடத்தில் பொருத்தமாகும்.

இந்த மாகாணசபையில் இருக்கும் அதிகாரிகளில் கடற்படைப் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாதவர்களில் பிரதம செயலாளரும் ஒருவராவார். அதனால்தான், அவரால் இந்த மாகாணசபையை அவரால் தெளிவாக வழிநடத்த முடிகிறது என நினைக்கின்றேன்.

இங்குள்ள அதிகாரிகளில் பலர் கடந்த காலங்களில் கடற்படைப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த மனநிலையிலிருந்து நீங்கள் மாற வேண்டும். இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாகாணசபையாகும்.

இங்குள்குள்ள பிரதிநிதிகள் தமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அவர்களின் ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்பதா -  இங்குள்ள கடற்படைப் பள்ளிக் கூடங்களில் படித்த அதிகாரிகளின் ஆசை? அவ்வாறு நீங்கள் விரும்பக் கூடாது. உங்கள் மனநிலையில் மாற்றம் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எந்தவித சலுகைகளும் இந்த சபையில் வழங்கப்படவில்லை என்று உறுப்பினர் துரைரட்ணம் இங்கு கூறியிருந்தார். நான் ஒரு விண்ணப்பத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். முன்பிருந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எவ்வாறான சலுகைகளெல்லாம் வழங்கப்பட்டனவோ, அவை அனைத்தும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கும் வழங்கப்பட வேண்டும்' என்றார்.

  Comments - 0

  • babagee Friday, 14 December 2012 12:15 AM

    இலங்கையில் எத்தனை மாகாண சபைகள் இருக்கின்றது என்பது சந்தேகமாக இருந்தாலும் கிழக்கு மாகாண சபை இருக்கின்றது என்பதற்கும் அது உயிரோட்டமாக இருக்கின்றது என்பதற்கும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீரே காரணமாக திகழ்வது பெருமையாக இருக்கின்றது இவரின் வேகமும், துணிச்சலும், சேவை மனப்பாங்கும் மேலும் மேலும் உயர வேண்டுமென வாழ்த்துகின்றேன் .....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X