2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்தில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக விசனம்

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அக்கரைப்பற்று வலயக் கல்விப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறுபட்ட பாகுபாடுகளுடனும் நிபந்தனைகளுக்குப் புறம்பான வகையிலும் உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று கல்வி வயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி செயற்படும் வகையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்றுக் கோட்டப் பாடசாலைகளில் பணியாற்றும் சுமார் 50 ஆசிரியர்களுக்கு அவர்களின் பாடசாலைகளிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொத்துவில் பிரதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களிலேயே பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாகவும், சில நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவதுளூ

அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கல்விக் கோட்டப் பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கடந்த வருடம் இதேபோன்று பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. அதன்போது, அவர்களுக்கான இடமாற்றமானது 1 வருடத்துக்கு வரையறுக்கப்பட்டது என்றும், ஒரு வருடத்தின் பின்னர் இடமாற்றத்துக்குள்ளான ஆசிரியர்கள் அவர்களின் முந்தைய பாடசாலைகளுக்கு வந்து கற்பிக்க முடியும் எனவும், அப்போது வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இம்முறை வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதங்களில் அவ்வாறான கால எல்லை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எனவே, இம்முறை வழங்கப்பட்டுள்ள கடிதத்திலும் இடமாற்றக் காலத்தினை ஒரு வருடத்துக்கு வரையறுத்து எழுத்து மூலம் வழங்க வேண்டுமென இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது, காலத்தினை வரையறுக்காமல் பொத்துவிலுக்கான இடமாற்றக் கடிதங்களை தமக்கு வழங்கியுள்ள அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரான ஏ.எல்.எம். காசிம்தான், கடந்த முறை  ஒரு வருடம் எனும் கால வரையறையினைக் குறிப்பிட்டு பொத்துவிலுக்கான இடமாற்றக் கடிதங்களை வழங்கியிருந்தார் எனவும், இது பாகுபாடானதொரு செயற்பாடாகுமென்றும் ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை, ஆசிரியர் நியமனத்தினைப் பெற்று 5 வருடங்கள் பூர்தியாகாத ஆசிரியர்களும் பொத்துவில் பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் நியமனமொன்றினைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர், அவர் நியமனம் பெறும் பாடசாலையில் 5 ஆண்டு காலத்துக்கு தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டுமென்பதும், அக்கால கட்டத்தில் இடமாற்றம் பெறுவதற்கு அந்த ஆசிரியருக்கு உரிமை இல்லை என்பதும் கண்டிப்பான விதியாகும்.

ஆசிரியர்களின் நியமனக் கடிதங்களில் இவ்விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெற்று 05 வருடங்கள் பூர்த்தியாகாத பல ஆசிரியர்களுக்கு பொத்துவில் பிரதேச பாடசாலைக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்படி இடமாற்றத்திலுள்ள பாரபட்சங்களைக் களைந்து, நிபந்தனைகள் மீறப்படாத வகையில் இடமாற்றங்களை வழங்குமாறு இப் பிரதேசத்திலுள்ள ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

                                                                                  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X