2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'சந்தாங்கேனி மைதானத்திற்கு அருகில் இருந்த வீடுகள் உடைக்கப்பட்டது அத்துமீறிய செயற்பாடு'

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன்


'கல்முனை, சந்தாங்கேணி மைதானத்தின் அருகில்; அமைக்கப்பட்டிருந்த தமிழர்கள் இருவரின் வீடுகளை கல்முனை மாநகரசபையினர் உடைத்தது சட்ட விரோதமானதும் அத்துமீறிய செயற்பாடும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

'சட்ட விரோத கட்டிடம் என்றால் சட்ட ரீதியாக அணுகி நடவடிக்கையெடுக்கவேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகரசபைக்குரிய சந்தாங்கேணி மைதானத்துக்கு அருகில் வசித்துவந்த இரண்டு தமிழர்களின் குடியிருப்புக்கள் மாநகரசபையினால் அண்மையில் அகற்றப்பட்டன.

மேற்படி குடியிருப்பாளர்கள் அரச காணியில் சட்டவிரோதமாக குடியிருப்பதாக கூறி மாநகரசபையினர் இக்குடியிருப்புகளை அகற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கலையரசன் மற்றும் இராஜேஸ்வரன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

இதன்போது அப்பகுதிக்கு விஜயம்மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களிடமும் கலந்துரையாடினர்.

அத்துடன் கல்முனை மாநகரசபைக்கு சென்று மாநகர முதல்வர் சிராஜ் மீராசாஹிபை சந்தித்து குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடினர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,


'கல்முனை சந்தாங்கேணி மைதானத்துக்கு அருகில் குறித்த இரு குடும்பத்தினரும் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர்.
இவர்களில் ஒருகுடும்பத்தினர் காணி உறுதி வைத்துள்ளனர். மற்ற குடும்பத்தினர் காணி உறுதிக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

இதேவேளை, அப்பகுதியில் இரு இனங்களையும் சேர்ந்த 12இற்;கும் மேற்பட்ட அத்துமீறிய குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்த இரு குடும்பத்தினர் மீது மட்டும் நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது கல்முனை மாநகரசபையின் அத்துமீறிய செயற்பாட்டையே காட்டிநிற்கின்றது. சட்ட விரோத கட்டிடங்கள் அகற்றப்படவேண்டுமானால் நீதிமன்ற உத்தரவை பெறவேண்டும். அது தொடர்பில் அங்கு குடியிருப்போருக்கு 14 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் வழங்கப்படவேண்டும் என்றார்.

ஆனால் இவை எதுவும் செய்யாமல் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையானது ஒரு அத்துமீறிய, பிழையான நடவடிக்கையென்பதை தான் கல்முனை மாநகர முதல்வரிடம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த இரு வீட்டாரும் சட்ட ரீதியாக மின்சாரம் பெற்றுள்ள அதேவேளை மைதானத்துக்கும் வீட்டுக்கும் இடையில் கால்வாய் ஒன்றை அமைத்துள்ளதையும் தான் கல்முனை மாநகர முதல்வரிடம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அது அனைவருக்குமான நடவடிக்கையாக இருக்கவேண்டும். குறித்த இருவருக்கு எதிராக நடவடிக்கையெடுத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறினார்.

தனது கருத்துக்களை கேட்டுகொண்ட கல்முனை மாநகர முதல்வர், சில நிபந்தனைகளுடன் அப்பகுதியில் வீடுகளை அமைப்பதற்கு அனுமதியளிப்பதாகவும் சட்ட விரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை ஏனையவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போது குறித்த இருவரும் உள்வாங்கப்படுவார்கள் என மாநகர முதல்வர் தெரிவித்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X