2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபையின் மு.கா. உறுப்பினர்களுக்கு இடையில் இழுபறி

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.ரம்ஸான், அப்துல் அஸீஸ்


கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை மேயர் பதலியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார்.

இதற்கான காலக்கெடு நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தனது இராஜினாமா குறித்து கல்முனை மேயர் விசேட உரையாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் மேயரின் விசேட உரை இடம்பெறவில்லை.

எவ்வாறாயினும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டப்பட்ட அடுத்த நடப்பாண்டிற்கான உப குழு உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றது. இதன்போது மேயர் உட்பட ஆறு பேரைக் கொண்ட நிதிக் குழுவிற்கான உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.

நிதிக்குழுவிற்கு ஐந்து பேரை தெரிவுசெய்வதற்காக ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தெஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்புக்கு மேயர் சிராஸ் அழைப்பு விடுத்தார்.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் எஸ். ஜெயகுமார் (16 வாக்குகள்), ஏ.எம்.றியாஸ் (14 வாக்குகள்), எஸ்.உமரலி (12 வாக்குகள்), ஏ.பறக்கதுல்லாஹ் (11 வாக்குகள்) மற்றும் ஏ.ஏ.பஷீர் (10 வாக்குளை) ஆகியோர் நிதிக்குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.

எனினும் ஏ.எம்.பிர்தெஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய இருவரும் குறித்த வாக்கெடுப்பில் தோல்வியுற்றனர். நிதிக்குவிற்கான தேர்தலில் தோல்வியடைந்த மாநகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் மற்றும் சாலித்தீன் ஆகியோர் கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தொடந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி கூட்டம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 30 October 2013 03:25 PM

    இதனை பார்த்த தலைவர் ஆப்பிழுத்த குரங்கு போல இருப்பாரே... தலைவா உன்னிடம் ஆளுமை இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தலைவா நீங்கள் போடும் தாளத்திற்கு காவடி ஆடும் மேயர் நான் இல்லை, நான் இல்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .