2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வட்டமடு மேய்ச்சல் தரையில் வேளாண்மை செய்ய அனுமதி வழங்கியமையை எதிர்த்து உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வட்டமடு மேய்ச்சல் தரைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு ஒரு தலைப்பட்சமாக  விவசாயிகளுக்கு வனபரிபாலனசபை அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள கால்நடையாளர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டமடு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட கால்நடையாளர்கள் சாகும்வரையிலான  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டமடு மேய்ச்சல் தரை பிரதேசத்தில் உள்ள 04 கண்டங்கள் உள்ளிட்ட 1,380 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அனுமதி வழங்குமாறு வனபரிபாலன சபையின் தலைவருக்கு பணிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கால்நடையாளர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள  அனுமதியானது ஒரு தலைப்பட்சமானது என  ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களின்  கால்நடை வளர்ப்புச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள்  கூறியுள்ளனர்.

மேலும், இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அனுமதியை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இல்லாவிடில் 40,000 கால்நடைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டு  கால்நடையாளர்களுக்கு இதற்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் இவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கான தீர்வு கிடைக்கும்வரை சாகும்வரையிலான  உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் எனவும் ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களின்  கால்நடை வளர்ப்புச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள்  கூறியுள்ளனர்.

'மஹிந்த சிந்தனையில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதிலும், இந்தத்; தீர்மானத்துக்கு மாறாக அம்பாறை மாவட்டத்தில் பால் உற்பத்தி மழுங்கடிக்கப்படுகின்றது', 'வட்டமடு மேய்ச்சல் தரையில் நீதி நித்திரை கொள்கின்றதா'  போன்ற  சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

1976ஆம் ஆண்டு வர்த்தமானியில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4,000 ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறு மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டிருந்த  நிலப்பரப்பை விவசாயிகள் அத்துமீறி ஆக்கிரமித்து வேளாண்மை நடவடிக்கையில்  ஈடுபட்டும் வந்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதி திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பில்; கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

இதன்போது  வட்டமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் வட்டமடு மேய்ச்சல் தரை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு களநிலவரங்களை பார்வையிட்டு அதன் பின்னர் அம்பாறை கச்சேரியில் கலந்துரையாடல் நடைபெற்று பின்னரே தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னர் வட்டமடு மேய்ச்சல் தரை பிரதேசத்தில் உள்ள 04 கண்டங்கள் உள்ளிட்ட 1,380 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அனுமதி வழங்குமாறு வனபரிபாலன சபையின் தலைவருக்கு பணிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது ஒரு தலைப்பட்சமானது எனக் கூறி கால்நடையாளர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X