2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கல்விக்காக உதவுதல் ஒருபோதும் வீண் போகாது: காமினி இகலவெல

Gavitha   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வறிய மாணவர்களின் கல்விக்காக உதவுதல் என்பது ஒரு போதும் வீண் போவதில்லை என ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி இகலவெல தெரிவித்தார்.

ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 500 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்குதல், 40 மாணவர்களுக்குப் புலமைப் பரிசில், வறிய குடும்பங்களுக்கு மின்சார இணைப்பைப் பெறுவதற்கான கட்டணம் ஆகியவை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் அதன் உப தலைவர் கே.எம். பதுறுஸ்ஸமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கல்வி என்பது அழிக்க முடியாத செல்வம், ஆனால் அந்தக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு வறிய மாணவர்கள் சிரமப்படுகின்ற போதிலும் இப்பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபை கை கொடுத்து வருவது பற்றி நான் அறிந்துள்ளேன். இது வறிய மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் அன்ஸார் வறிய மாணவர்களுக்கு உதவுவதில் குறியாக இருக்கின்றார்.

எனவே கல்விக்காக வழங்கப்படுகின்ற இந்த உதவிகளை எவரும் துஷ்பிரயோகம் செய்துவிடக்கூடாது. நாட்டில் சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு கல்விதான் சிறந்த உபகரணம்.' என்றார்.

இந்நிகழ்வில் மொத்தமாக சுமார் ஆறு இலட்சம் ரூபாய்க்கான உதவிகள் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டதாக ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி எம்.எச்.எம். சனூஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபை உப தலைவர் கே.எம். பதுறுஸ்ஸமான், அதன் நிருவாக அதிகாரி எம்.எச்.எம். சனூஸ், ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நஸீர், ஏறாவூர் மத்தியஸ்த சபைத் தலைவர் எம்.எம். இஸ்மாயில் உட்பட பாசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X