2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'இலங்கையின் அரசியல் மாற்றம் பெற்று வருகின்றது'

Thipaan   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

நிமிடத்துக்;கு நிமிடம் யார் யார் கைது செய்யப்படுவார்கள் என்பதை கூற முடியாத நிலைக்கு இலங்கையின் அரசியல் மாற்றம் பெற்று வருகின்றது. எந்த தேசிய கீதத்தை காதுகளினால் கேட்கக்கூடாது என நினைத்தோமோ அதனை தமிழில் கூட வழங்குவதற்கு தயங்கும் நிலையும் உருவாகி வருகின்றது என ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் கே.இரத்தினவேல் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகிபுரம் கனகர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு கண்ணகிராம பொது மைதானத்தில் நேற்று(26) நடைபெற்றது.

பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நாம் விளையாடிக் கொண்டிருக்கும் போதே வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய உணர்வு விடுதலை என்பவற்றை மறந்து விடக்கூடாது.

இறுதிவரை எமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியதுடன் எமது எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்க வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எங்களது காணிகளை எங்களுக்கே தந்து எதனையோ தமிழ் மக்களுக்கு வழங்கி விட்டதாக ஏமாற்றம் செய்யும் அரசியல் காய்நகர்த்தல் நடைபெற்று வருகின்றது.

மறுபக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடியில் சிறுபான்மையை பிரதிபலிக்கும் அடையாளங்களை கூட இல்லாமல் செய்திருக்கின்றார்கள்.

இவ்வாறான மோசமான நிலைக்கும் இலங்கையின் அரசியல் சென்று கொண்டிருப்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் ஊடக துறையை சார்ந்தவர்கள் ஒரு பக்கம் சாராமல் பக்கசார்பின்றி செய்திகளை வெளியிடும் தர்மத்தினை கடைப்பிடிக்க வேண்டும். சிறந்த ஊடகவியளாளரான நித்தியானந்தனின் சிரார்த்த தினம் இன்று. அவரை போன்ற உண்மையான நேர்மையான தியாகிகளே இத்துறையினை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் கே.தர்மதாச உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .