2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மையவாடியை ஊடறுத்து பாதை: மக்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 மே 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, ஐ.ஏ.ஸிறாஜ்

பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் அமைந்துள்ள பொது மையவாடியை ஊடறுத்து பாதை அமைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (08) மேற்கொண்டனர்.

இது தொடர்பில் பொத்துவில் நான்காம் வட்டார மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மௌலவி ஏ.முகைதீன் வாவா கருத்து தெரிவிக்கையில்,

மையவாடியை ஊடறுத்து பாதை அமைத்து அதனூடாக போக்குவரத்து செய்வது இஸ்லாமிய அடிப்படைக்கு மாறான செயலாகும். இப்பிரதேச மக்களின் விருப்புக்கு மாறாக பாதை அமைக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு.  

பொது மையவாடிக்கு நடுவால் பிரதேச சபையினால் தற்பொழுது பாதை அமைக்கப்பட்டு வரும் செயலை கண்டித்தே மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக பொத்துவில் பொது மையவாடியில் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மையவாடியின் நடுவில் கிறவல் போட்டு பிரதேச சபை பாதை அமைப்பதன் மர்மம் என்ன? எத்தனையோ ஜனாஸாக்கள் இந்த மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மேல் வாகனங்கள் மற்றும் மனிதர்கள் நடந்து செல்லலாமா? மையவாடியில் பாதை அமைக்கும் போது இதைச் சிந்திக்காமல் செய்தது ஏன்? பெண்கள் மையவாடியின் ஊடாக அமைக்கப்பட்ட பாதையை போக்குவரத்துக்கு பயன்படுத்துவார்கள்.
 
இதற்கு இஸ்லாத்தின் பார்வையில் என்ன தீர்ப்பு, என்பதை பொத்துவில் ஐம்மியத்துல் உலமா சபையினர் சிந்திக்கவில்லை என்பது வேதனை தரும் விடயமாகும்.

மையவாடியை சுற்றி பாதைகள் இருக்கும் பொழுது நடுவால் பாதை தேவையற்றது. இதனை பிரதேச சபை பெருமிதமாக கொண்டு மார்க்கச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய சபையாக மிளிர்வதுடன், இப்பாதை அமைப்பதை நிறுத்தி மையவாடியின் சுற்று மதிலை பூரணமாக அமைப்பதற்கு முன்வர வேண்டும் என்றார்.

இப்பாதையை தடை செய்யுமாறு கோரிய மகஜர் பிரதேச செயலாளார் எல்.எம்.எம். முஸரத்திடம் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதன் பிரதிகள் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித், மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
இப்பாதை அமைப்பதற்கு பொறுப்பாகவுள்ள பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித்தை தொடர்புகொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,
 
இப்பாதையானது பொதுமக்கள் போக்குவரத்து செய்வதற்கான ஒரு பொதுவான பாதையாக அமைக்கப்படவில்லை. இது ஜலால்தீன் சதுக்கத்தின் மையவாடியின் ஜனாசாக்களைக் கொண்டு செல்வதற்கும் மையவாடிக்குமான ஒரு தனிப்பட்ட பாவனைக்கான பாதையாகவே அமைக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில் போதிய தெளிவின்மையாலேயே மக்கள் பிழையாக விளங்கிக் கொண்டு இவ்வாறு செயற்படுகின்றனர். சுமூகமான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் பொத்துவில் பிரதேச ஜம்யத்துல் உலமா சபையுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதென அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X