2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாகாணங்களுக்கான முழு அதிகாரங்களையும் பெற முன்வருவோம்: நஸீர் அஹமட்

Thipaan   / 2015 மே 12 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எஸ்.சபேசன்

மாகாண சபைக்கான அதிகாரங்கள் அனைத்தையும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு உடனடியாக வழங்குவதற்குரிய அதிகாரத்தை கொடுப்பதற்கு நல்லாட்சிக்கான இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், திங்கட்கிழமை(11) தெரிவித்தார்.

நகர எழுச்சி திட்டத்தின் கீழ், 18 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச சபைக்கான புதிய கடடட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள மகாண சபை கிழக்கு மாகாண சபை மாத்திரம்தான்.
பல சவால்கள் இருந்த போதிலும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் இந்த மாகாண சபை தான்.

அதற்கொரு முக்கிய காரணம், நாங்கள் எல்லோருமே பாதிக்கப்பட்டவர்களாக இருந்து அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காக துடித்துக் கொண்டிருக்கின்ற உள்ளங்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கின்றோம்.

மாகாண சபைக்கு அதிகாரங்களை பெறுகின்ற முதலமைச்சர்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்களும் உறுப்பினர்களும் இருப்போம்.

குறிப்பாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து அரசியல் அதிகாரத்தை பெற போராட வேண்டிவந்தாலும் அதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

கடந்த ஆட்சியில் கூட நான் ஓர் அமைச்சராக இருந்த போதிலும் எந்தவித செயற்பாடுகளையும் செய்ய முடியாத கையாலாகாத அமைச்சராக குந்தியிருந்த வரலாற்றை நான் அறிவேன்.

அவ்வாறானதொரு அரசியல் கலாசாரத்திலிருந்து விடுபட்டு ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டுக்;கு சிறுபான்மை சமூகம் கொடுத்த நல்லாட்சியை எங்களுக்குள்ளும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தி ஆட்சியை கொண்டு செல்கின்றோம்.

மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை பார்க்கின்ற போது அரசியல் சட்டத்தில் இருக்கின்ற அதிகாரத்தினை செயற்படுத்த முடியாது இன்னும் தவித்துக் கொண்டிருக்கின்ற அரசியல் அமைச்சர்களாக இன்னும் குந்திக்கொண்டிருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்காக உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தச்சட்டமூலம் இன்று இந்த மாகாணங்களை தவிர்ந்த பல மாகாணங்களிலே நியதிச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனினும் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்காக உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தச்சட்டமூலத்தை செயற்படுத்த முடியாத மாகாண சபையாக தள்ளப்பட்டுள்ள வரலாற்று துரோகங்களை நாம் பார்க்கின்றோம்.

இவைகளை களைந்தெறிவதற்காக தயாராக இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு மகாணத்திலே பிரச்சினை இருக்கின்றது என்பதை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டு இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் காரணம் இந்த மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே.

கிழக்கு மாகாணம் வறுமையான ஒரு மாகாணமாகவே காணப்படுகின்றது. எவ்வளவோ வளங்களை கொண்ட கிழக்கு மகாணத்திலிருந்து வறுமையை போக்குவதற்காக எவரும் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக போகக்கூடாது.

அதற்குரிய அனைத்து திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம். இதற்கமைய நாவிதன்வெளி பிரதேசத்திலும் பெரியதொரு தொழில் பேட்டையை உருவாக்கி இப்பிரதேச மக்களின் வாழ்கையிலும் ஒளியேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் எஸ்.குணரெட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கே.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ரி.கலையரசன், எம்.இராஜேஸ்வரன், நாவிதன்வெளி பிரதேச சபை உபதவிசாளர் ஏ.பிள்ளையான்தம்பி, உறுப்பினர்களான யூ.தேவன், ரி.புவசாந்தன், எம்.ஐ.தஜாப்தீன், ஏ.சுதர்சன், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .